உதயநிதி நேரில் ஆஜராக விலக்கை நீட்டித்தது கோர்ட்: அவதுாறு வழக்கு
உதயநிதி நேரில் ஆஜராக விலக்கை நீட்டித்தது கோர்ட்: அவதுாறு வழக்கு
ADDED : நவ 23, 2024 12:55 AM

புதுடில்லி: சனாதன தர்மம் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்த விவகாரத்தில், பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக விசாரிக்க கோரி தமிழக துணை முதல்வர் உதயநிதி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சர்ச்சை
'சனாதன தர்மம் என்பது கொரோனா, மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய். அது ஒழிக்கப்பட வேண்டும்' என, கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த மாநாடு ஒன்றில் தமிழக துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
இது, நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீஹார், கர்நாடகா, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் அவர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, உதயநிதியின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், 'பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அவர் பேச்சில் கவனமாக இருக்கவும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தியது.
இந்த வழக்கில், பல்வேறு மாநில நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து உதயநிதிக்கு இடைக்கால விலக்கு அளித்த நீதிபதிகள், மனு மீது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
விசாரணை
இந்நிலையில், இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, 'வழக்குப்பதிவு செய்துள்ள மாநிலங்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை' என, தெரிவித்தார்.
இதையடுத்து, நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி மாநிலங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து உதயநிதிக்கு அளிக்கப்பட்ட இடைக்கால நிவாரணம் தொடரும் என்றும் உத்தரவிட்டனர்.
வழக்கு, பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.