ADDED : மே 02, 2025 11:54 PM
புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு டில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் நேருவால் துவங்கப்பட்ட, 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டு வந்த நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை வாங்கி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியா, ராகுல் உள்ளிட்டோர் முறைகேடு செய்ததாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் சமீபத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் காங்கிரஸ் அயலக பிரிவு தலைவர் ஷாம் பிட்ராடோ உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த விவகாரத்தில், 5,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றப்பத்திரிகை அடிப்படையில் விசாரணையை துவங்குவதற்கு முன், வழக்கில் தொடர்புடையவர்களின் வாதங்களை பெற வேண்டியது அவசியம் என தெரிவித்த நீதிமன்றம், ராகுல், சோனியா, ஷாம் பிட்ராடோ உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.