அரசியலில் காண்டாமிருக தோல் வேண்டும்: எல்.முருகன் வழக்கில் கோர்ட் கருத்து
அரசியலில் காண்டாமிருக தோல் வேண்டும்: எல்.முருகன் வழக்கில் கோர்ட் கருத்து
UPDATED : டிச 05, 2024 02:56 AM
ADDED : டிச 05, 2024 02:25 AM
புதுடில்லி,'அரசியலுக்கு வந்துவிட்டால், எதையும் தாங்கக்கூடிய அளவிலான காண்டாமிருகத்தின் தோல் இருக்க வேண்டும்' என, மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான வழக்கில் முரசொலி அறக்கட்டளையை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த போது, கடந்த 2020ல் வேலுாரில் நடந்த கூட்டத்தில், 'சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம், பஞ்சமி நிலம்' என மத்திய இணை அமைச்சரான முருகன் பேசியிருந்தார்.
இந்த விவகாரத்தில் முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட குற்றவியல் அவதுாறு வழக்கு, சென்னை எம்.பி., - எம்.எல்.ஏ-.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு, கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முருகன் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் யாரையும் அவதுாறு செய்யும் எண்ணம் இல்லை என்பதை தெளிவுபடுத்த முருகன் தயாராக இருப்பதை, முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் எடுத்துஉரைத்தனர்.
அப்போது முரசொலி அறக்கட்டளை வழக்கறிஞரிடம், 'நீங்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்றால், காண்டாமிருகத்தை போல் தோல் இருக்க வேண்டும் என, மராத்தி மொழியில் பழமொழி உள்ளது.
'அதற்கு ஏற்றாற்போல் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். உங்கள் இருவருக்கும் இடையிலான சண்டையை பொதுமக்கள் முன் வைக்க வேண்டும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், வழக்கு விசாரணையை இன்றைய தினத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.