ஊழியரை துன்புறுத்திய ஐ.ஏ.எஸ்., வழக்கு பதிய கோர்ட் அதிரடி உத்தரவு
ஊழியரை துன்புறுத்திய ஐ.ஏ.எஸ்., வழக்கு பதிய கோர்ட் அதிரடி உத்தரவு
ADDED : நவ 07, 2024 01:47 AM
நல்பாரி, தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியரை துன்புறுத்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அசாம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அசாம் மாநிலம் நல்பாரி மாவட்ட கமிஷனராக பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வர்னாலி டேகா. இவருக்கு கீழ், சர்க்கிள் அதிகாரியாக அர்பனா சர்மா என்ற பெண் உள்ளார். கடந்த மே 7ல் அசாமில் லோக்சபா தேர்தல் நடந்தது.
அதற்கு அடுத்த நாள், நல்பாரி போலீசில் அர்பனா சர்மா தன் உயர் அதிகாரியும், மாவட்ட கமிஷனருமான வர்னாலி டேகா மீது புகார் மனு அளித்தார்.
அதில், தேர்தல் பணியில் இருந்த தன்னை, உயர் அதிகாரி மற்ற அதிகாரிகள் முன் திட்டியதுடன் மனரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்திருந்தார்.
மேலும், நான் தேர்தல் பணியை முழுமையாக செய்யவில்லை என குற்றஞ்சாட்டி, என்னை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்தும் கமிஷனர் டேகா உத்தரவிட்டார். எனவே, டேகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அவர்கள் வழக்குப்பதிவு செய்யாததை தொடர்ந்து, நல்பாரி போலீஸ் எஸ்.பி.,யை இ - மெயில் வாயிலாக அர்பனா சர்மா அணுகினார். அதற்கும் அர்பனாவுக்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து, குவஹாத்தி உயர் நீதிமன்றத்தை அர்பனா நாடியதை அடுத்து, மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது குறித்த வழக்கு, நல்பாரி மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.