சிகிச்சைக்கான கட்டண விபரங்களை ஒட்ட மருத்துவமனைகளுக்கு கோர்ட் உத்தரவு
சிகிச்சைக்கான கட்டண விபரங்களை ஒட்ட மருத்துவமனைகளுக்கு கோர்ட் உத்தரவு
ADDED : நவ 28, 2025 03:53 AM

திருவனந்தபுரம்: 'தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு அளிக்கும் சேவைகள், கட்டணங்கள் ஆகியவற்றை தெளிவாக புரியும்படி வரவேற்பறை பகுதியில் எழுதி ஒட்ட வேண்டும்; அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் வெளியிட வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளில், நோயாளிகள் நலன் காக்கும் வகையில் மருத்துவ நிறுவனங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்தும், சேவைகள் மற்றும் கட்டண விபரங்கள் பற்றியும் வரவேற்பறையின் முகப்பில் தெளிவாக புரியும்படி எழுதி ஒட்டி இருத்தல் அவசியம்.
முக்கியமான தகவல்கள், படுக்கை பிரிவுகள், ஐ.சி.யு.,வில் எத்தனை படுக்கைகள் உள்ளன, ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனை கூட வசதிகள், ஆம்புலன்ஸ் சேவை ஆகிய விபரங்களும் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இதை, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் வெளியிட வேண்டும் என, மருத்துவ நிறுவனங்கள் சட்டம் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.
பின்பற்ற தவறும் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், அபராதம் விதிக்கவும் அந்த சட்டம் வகை செய்கிறது.
கட்டண விபரங்களை பதாகைகளில் எழுதி ஒட்டுவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதால், 2018ல் இயற்றப்பட்ட இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், சட்டம் செல்லுபடியாகும் என தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தின் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி மற்றும் ஷ்யாம் குமார் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்து, முந்தைய உத்தரவை உறுதி செய்தது.
இந்த சட்டத்தை தனியார் மருத்துவமனைகள் பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்யுமாறு மாநில தலைமை செயலர் மற்றும் காவல் துறை தலைவரையும் அறிவுறுத்தியுள்ளது.

