வெளியுறவு இணையமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு
வெளியுறவு இணையமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 14, 2025 01:02 AM

கோண்டா: நிலத்தகராறு தொடர்பாக மத்திய வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு, உத்தர பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின், பித்தோவ்ராவில் உள்ள மங்காபூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் சிங். இவர், உத்தர பிரதேசத்தின் கோண்டா மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
என் மனைவி மனீஷா பெயரில், நிலம் ஒன்றை வாங்கியிருந்தேன். இந்த நிலம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மித்லேஷ் ரஸ்தோகி, காந்தி சிங் ஆகியோர் வாங்கியது போல் மோசடி செய்து, அதை என்னிடம் இருந்து பறிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். இந்த மோசடிக்கு, அந்த நிலத்தை எனக்கு விற்றவரும் உடந்தை என தெரியவந்ததை அடுத்து, இது குறித்து போலீசில் புகாரளித்தேன்.
குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, 2024ல் நிலத்தை விற்றவர் மற்றும் வாங்கியதாக கூறப்படுபவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.
இருப்பினும், இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகித்த நான், வழக்கை முடித்து வைக்க வேண்டாம் என கூறி நீதிமன்றத்தை நாடினேன். இதையடுத்து, கடந்த மார்ச் முதல் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய வெளியுறவு துணை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கின் உதவியாளர் ராஜேஷ் சிங் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி என்னையும், மனைவியையும் மிரட்டி வருகிறார்.
எங்கள் மீது போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கை திரும்பப்பெறாவிட்டால், கொன்று விடுவோம் என மிரட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கிற்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மிரட்டல் குறித்து போலீசில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், இதில், தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் நிலம் மீண்டும் கிடைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மனுவை விசாரித்த கோண்டா மாவட்ட எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், அவரின் உதவியாளர் ராஜேஷ் சிங் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்ய மங்காபூர் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.