பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் சீமான், விஜயலட்சுமிக்கு கோர்ட் உத்தரவு
பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் சீமான், விஜயலட்சுமிக்கு கோர்ட் உத்தரவு
ADDED : செப் 25, 2025 01:11 AM
'சீமான் மற்றும் விஜயலட்சுமி பரஸ்பரம் வழக்குகளை வாபஸ் பெறுவதுடன் மன்னிப்பு கேட்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரண்ட்ஸ் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
மீண்டும் விசாரணை இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், 'விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். கூடவே, அது தொடர்பாக பிரமாண பத்திரத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''சீமான் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, விஜயலட்சுமிக்கு எதிரான அவதுாறை அதிகப்படுத்தி, அதை வெளிப்படுத்தி இருக்கிறார்,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட சீமான் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், ''கடந்த 2011ல், விஜயலட்சுமி தனக்கு எதிரான அனைத்து புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் வாபஸ் வாங்கிக் கொண்டார். அதன்பின், 11 ஆண்டுகள் கழித்து கடந்த 2023ல் மீண்டும் அதே புகாரை தெரிவித்திருக்கிறார்,'' என்றார்.
அப்போது பேசிய நீதிபதிகள், 'இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?' என விஜயலட்சுமி தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, சீமான் மற்றும் அவரது கட்சித் தொண்டர்களால் கடுமையான அச்சுறுத்தலுக்கு விஜயலட்சுமி ஆளானதாகவும், அதனால் மீண்டும் பெங்களூருக்கு அவர் சென்று விட்டதாகவும், சீமானால் விஜயலட்சுமியின் சினிமா வாழ்க்கை சீரழிந்ததுடன், பொது வெளியிலும் அவருடைய பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதன் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''இருவரும் பரஸ்பரம் கொடுத்துள்ள புகார்களை திரும்ப பெறுவதுடன், ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு, இந்த பிரச்னையை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்,'' என, குறிப்பிட்டனர்.
பேசக்கூடாது இதை, சீமான் தரப்பு ஏற்றுக் கொண்டது. ஆனால், விஜயலட்சுமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ''விஜயலட்சுமிக்கு எதிராக சீமான் எந்த வழக்கையும் தாக்கல் செய்யாத நிலையில், சீமானிடம் விஜயலட்சுமி எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்?,'' என விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில், இரு தரப்பும் வழக்குகளை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் மற்றொருவரிடம் மன்னிப்பு கேட்டு, அது தொடர்பான விபரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,'' என தெரிவித்தனர்.
அப்போது விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர், ''சீமான் மட்டுமல்லாமல், அவரது கட்சிக்காரர்களும் பொது வெளியில் அவமரியாதையாக பேசுகின்றனர்,'' என தெரிவித்தார்.
இதையடுத்து, ''இரு தரப்பும் இனி ஊடகங்களிடமும், சமூக வலைதளங்களிலும் பேசக் கூடாது; மீறி பேசினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என நீதிபதிகள் எச்சரித்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -