பெங்களூரில் சட்டவிரோத பிளக்ஸ்கள் அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு
பெங்களூரில் சட்டவிரோத பிளக்ஸ்கள் அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜன 20, 2024 05:53 AM
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க, பெங்களூரு மாநகராட்சிக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அங்கீகரிக்கப்படாத விளம்பரப் பலகைகளை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர் மைகே கவுடா உட்பட பலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு, தலைமை நீதிபதி வரலே, நீதிபதி கிருஷ்ணா தீட்சித் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிவர்ம குமார் வாதிடுகையில், ''நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தாலும், சட்ட விரோத விளம்பரங்களால் பிரச்னை ஏற்படுவது நிற்கவில்லை.
போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் பல விளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது,'' என்றார்.
இதற்கு நீதிபதிகள் கூறியதாவது:
சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் குறித்து, தவறு செய்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதை அறிக்கை வாயிலாக தெரிவிக்க வேண்டும்.
சட்டவிரோத விளம்பரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்தும் தெரிவிக்க வேண்டும்.
மாநகராட்சியின் அனுமதி பெறாமல், கட்டணம் செலுத்தாமல் சட்டவிரோத விளம்பரங்கள் நிறுவப்பட்டால், குற்றவாளிகள், நிறுவனங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.