பாலியல் பலாத்கார வழக்கில் தமிழக இளைஞரை வீடியோ கான்பரன்சில் ஆஜராக கோர்ட் உத்தரவு
பாலியல் பலாத்கார வழக்கில் தமிழக இளைஞரை வீடியோ கான்பரன்சில் ஆஜராக கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 23, 2025 01:35 AM
பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கி தற்போது சிறையில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த இளைஞரை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தார். அதன் காரணமாக அந்த பெண் கர்ப்பமானார்.
அந்த பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதை காரணம்காட்டி, திருமணம் செய்து கொள்ள நவீன் மறுத்தார். மேலும், நவீனின் குடும்பத்தினர் அந்தப் பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், நவீன் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமின் மனுவை விசாரணை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாலமன், ''இரு தரப்பும் ஒருமித்த கருத்தோடு திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.
எனவே நவீனுக்கு ஜாமின் வழங்க வேண்டும்,'' என, வேண்டுகோள் விடுத்தார்.
பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், ''நவீன் சொல்வதை மட்டுமே நம்பி ஜாமின் வழங்க முடியாது.
இது ஜாதிய பிரச்னையாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், குழந்தைக்கும் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்தால் மட்டுமே ஜாமின் வழங்க வேண்டும்,'' என, வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள், 'சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவீன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆக. 25ம் தேதி மதியம் 2:00 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜாராக வேண்டும்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜாமின் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்' என, உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
-டில்லி சிறப்பு நிருபர்-

