சிறையில் இருந்தே சாட்சிகளுக்கு மிரட்டல் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு
சிறையில் இருந்தே சாட்சிகளுக்கு மிரட்டல் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு
ADDED : அக் 19, 2024 07:31 AM
பெங்களூரு : சிறையில் இருந்தபடி சாட்சிகளை மிரட்டிய வழக்கு தொடர்பாக, சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும்படி, சிறைத்துறை ஐ.ஜி.பி.,க்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரின் கோரமங்களாவில் 2021ல் ரவுடி ஜோசப் பாபு என்ற பப்லு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, ரவுடி சோமசேகர் கைது செய்யப்பட்டார். அவர், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையில் உள்ளது.
இவருக்கு எதிராக ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம், சாட்சியம் அளித்ததாக கூறப்படுகிறது. இவரது இன்ஸ்டாகிராமுக்கு, செப்டம்பர் 22ல், ரவுடி சோமசேகர் 'வாய்ஸ் மெசேஜ்' அனுப்பினார். அதில், 'பப்லு கொலை வழக்கில், யாரும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கக் கூடாது. சாட்சியம் அளித்தால் கொலை செய்வேன்' என மிரட்டினார். இதுகுறித்து, சி.சி.பி., போலீசாரிடம், ஆறுமுகம் புகார் அளித்துள்ளார்.
ஜோசப் கொலை வழக்கு தொடர்பாக, விசாரணை நடத்தி வரும், சி.சி.ஹெச்., 67வது நீதிமன்றத்தின் கவனத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர்.
இதை தீவிரமாக கருதிய நீதிமன்றம், 'சிறையில் உள்ள குற்றவாளி, மொபைல் போன் பயன்படுத்தியதற்கு, சிறை அதிகாரிகளின் தோல்வியே காரணம். சோமசேகருக்கு மொபைல் போன் கிடைத்தது எப்படி? இது குறித்து, சிறை அதிகாரிகளிடம் சிறைத்துறை ஐ.ஜி.பி., விசாரணை நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, வழக்கு விசாரணை முடியும் வரை, சாட்சிதாரர்களுக்கு, விசாரணை அதிகாரிகளும், கோரமங்களா போலீசாரும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, நேற்று உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுபடி, சிறையில் உள்ள ரவுடி சோமசேகரை, கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த, சி.சி.பி., போலீசார் தயாராகின்றனர். இதற்காக நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளனர்.

