சிறை நிர்வாகத்துக்கு கண்டனம்; ரூ.5 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவு
சிறை நிர்வாகத்துக்கு கண்டனம்; ரூ.5 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 26, 2025 01:19 AM
புதுடில்லி : உத்தர பிரதேச மதமாற்ற தடை சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், காஜியாபாத் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது மனுவை ஏப்ரல் 29ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து, அந்த நபரை விடுவிக்க காஜியாபாத் விசாரணை நீதிமன்றமும் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இருப்பினும், அவர் விடுவிக்கப்படாமல் சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாக, அவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
'உத்தர பிரதேச மதமாற்ற தடை சட்டத்தின் துணை பிரிவு, ஜாமின் உத்தரவில் குறிப்பிடப்படாததாலேயே தன்னை விடுவிக்கவில்லை' என, மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு, நீதிபதிகள் கே.விஸ்வநாதன், என்.கோடீஸ்வர் சிங் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னும், சம்பந்தப்பட்ட நபரை சிறையில் இருந்து விடுவிக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, உ.பி., அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சம்பந்தப்பட்ட நபர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார். தாமதம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது' என, தெரிவித்தார்.
இதைதொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சுதந்திரம் என்பது அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மிகவும் மதிப்புமிக்க மற்றும் விலைமதிப்பற்ற உரிமை. சிறையில் இருந்து ஒரு நபரை விடுவிப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணர வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுக்கு பின்னும், அவரை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து காஜியாபாத் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நபருக்கு மாநில அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.