திருநங்கையருக்கு இரு பெயர்களுடன் பிறப்பு சான்று வழங்க கோர்ட் உத்தரவு
திருநங்கையருக்கு இரு பெயர்களுடன் பிறப்பு சான்று வழங்க கோர்ட் உத்தரவு
ADDED : டிச 27, 2024 11:41 PM

பெங்களூரு: கர்நாடகாவில், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட திருநங்கையருக்கு இரு பெயர்கள் அடங்கிய திருத்தப்பட்ட பிறப்பு சான்றிதழ் வழங்கும்படி பதிவாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் மங்களூரைச் சேர்ந்த 34 வயது நபர், அறுவை சிகிச்சை வாயிலாக பாலின மறுசீரமைப்பு செய்ததை அடுத்து திருநங்கையாக மாறினார்.
சான்றிதழ்
தனக்கு, திருத்தப்பட்ட பிறப்பு சான்றிதழ் வழங்கக் கோரி மங்களூரு மாநகராட்சி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் பதிவாளரிடம் விண்ணப்பித்தார்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் - 1969ன் படி இது போன்ற சான்றிதழ் வழங்க முடியாது எனக்கூறி, திருநங்கையின் விண்ணப்பத்தை பதிவாளர் நிராகரித்தார்.
இதையடுத்து, பாலினம் திருத்தப்பட்ட சான்றிதழ் வழங்க பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திருநங்கை மனு தாக்கல் செய்தார். இது நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பாலின மாற்று அறுவை சிகிச்சையால் திருநங்கையாக மாறியவர்களுக்கு பாலினம் மாற்ற விபரங்களுடன் கூடிய திருத்தப்பட்ட பிறப்பு சான்றிதழ் வழங்க திருநங்கையர் உரிமை பாதுகாப்புச் சட்டம் - 2019 அனுமதிக்கிறது.
பாதுகாப்பு சட்டம்
இருப்பினும், அவர்களின் அசல் சான்றிதழில் இந்த திருத்தம் மேற்கொள்ள முடியாது. மனுதாரரின் விண்ணப்பத்தை பதிவாளர் நிராகரித்தது, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் - 1969ன் படி சரியானது.
அதே சமயம், அவர்களுக்கு திருத்தப்பட்ட சான்றிதழ் வழங்க மறுத்தது உரிமை மீறல்.
ஆகவே, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட திருநங்கையருக்கு, பாலினம் திருத்தப்பட்டதற்கான சான்றிதழை வழங்க சம்பந்தப்பட்ட பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது.
அந்த சான்றிதழில், திருங்கையின் முந்தைய மற்றும் திருத்தப்பட்ட பெயர் மற்றும் பாலினத்தை அவசியம் குறிப்பிட வேண்டும்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் - 1969ல், தேவையான திருத்தங்கள் செய்யப்படும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.
திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - 2019 மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் - 1969 ஆகியவற்றை மறுபரிசீலனை செய்து, விதிகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை கர்நாடக அரசும், மாநில சட்ட கமிஷனும் முன்மொழிய நீதிமன்றம் பரிந்துரைக்கிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

