சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் அமலாக்கத்துறைக்கு கோர்ட் கேள்வி
சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் அமலாக்கத்துறைக்கு கோர்ட் கேள்வி
ADDED : பிப் 14, 2025 01:33 AM

புதுடில்லி: வரதட்சணை கொடுமை சட்டத்தை போல, சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தையும் அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பல்வேறு நீதிமன்றங்களும் அமலாக்கத் துறையின் செயல்பாடுகளை காட்டமாக விமர்சித்து வருகிகின்றன.
ரூ.2,000 கோடி ஊழல்
ஹரியானா முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவரிடம், 15 மணி நேரம் விசாரணை நடத்தியதை 'மனிதாபிமானமற்ற செயல்' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
மும்பை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு உயர் நீதிமன்றங்களும், சட்டத்தை தன் கையில் அமலாக்கத் துறை எடுத்துக் கொள்வதாக விமர்சித்துள்ளன.
இந்நிலையில், சத்தீஸ்கரில் மதுபான கொள்கையில், 2,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் கலால் துறை அதிகாரி அருண் பதி திரிபாதி, ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அருண் பதிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், அமலாக்கத் துறைக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் கூறியதாவது:
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் என்பது வரதட்சணை கொடுமை சட்டத்தைப்போல அமலாக்கத் துறையால் பயன்படுத்தப்படுகிறதா? முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு சம்மன் அனுப்பி, விரைவாக கைது செய்த வேகத்தைப் போன்று, பயங்கரவாதம், கொடூர குற்றங்களில் கூட நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.
விசாரணை
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான ஒருவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியாது. இந்த வழக்கில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை.
அமலாக்கத் துறை அதிகாரிகள் நேரில் வந்து, விளக்கம் அளிக்க வேண்டும். குற்றங்களில் தண்டனை விகிதத்தை அதிகரிக்க, அறிவியல்பூர்வமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.