ADDED : நவ 27, 2024 12:34 AM

லக்னோ,பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ள, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக் கோரும் மனு மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ., தொண்டர் விக்னேஷ் சிஷிர் என்பவர், காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
'ஐரோப்பிய நாடான பிரிட்டனின் குடியுரிமையை ராகுல் பெற்றுஉள்ளார். இந்திய சட்டங்களின்படி, இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அதனால், ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்' என, அவர் மனுவில் கூறியிருந்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணையும் கேட்டிருந்தார். உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை, இந்த மனுவை முன்பு ரத்து செய்திருந்தது. குடியுரிமை சட்டத்தின் கீழ், வழக்கு தொடர அனுமதித்திருந்தது.
இதற்கிடையே, ராகுலின் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி, விக்னேஷ் சிஷிர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, விக்னேஷ் சிஷிர் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், டிச., 19ல் அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.