தெருநாய் விவகாரம்; தலைமை செயலர்கள் நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க கோர்ட் மறுப்பு
தெருநாய் விவகாரம்; தலைமை செயலர்கள் நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க கோர்ட் மறுப்பு
UPDATED : நவ 01, 2025 07:33 AM
ADDED : நவ 01, 2025 04:43 AM

'தெருநாய்க்கடி விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கு எந்த சலுகையும் அளிக்க முடியாது.
நீதிமன்றத்தில் நாளை மறுநாள் அவர்கள் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. தலைநகர் டில்லியில் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், அது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிந்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
காப்பகம்
ஆக., 11ல் விசாரித்த நீதிமன்றம், டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள அனைத்து தெருநாய் களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கும்படி உத்தரவிட்டது. இதற்கு ஒருசில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழ க்கை, ஆக., 22ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், தெருநாய்க்கடி சம்பவத்தை டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்துடன், நாடு முழுதும் விரிவுபடுத்தியது. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை வழக்கில் சேர்த்த நீதி மன்றம், விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகளுக்கு இணங்க, தற்போதுள்ள நாய் கூண்டுகள், உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
கடந்த 27ல், இந்த வ ழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, மேற்கு வங்கம், தெலுங்கானா தவிர்த்து, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்கள் நவ., 3ம் தேதி காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று ஆஜரானார். 'தெருநாய்க்கடி விவகாரத்தில் எங்களின் தவறு காரணமா க, மாநிலங்களின் தலைமை செயலர்களை நேரில் அழைக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்பட்டு விட்டது. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
நடவடிக்கை
'எனவே , தலைமை செயலர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும்' என, அவர் முறையிட்டார்.
இதன் பின் நீதிபதிகள் கூறியதாவது: பல ஆண்டுகளாக நகராட்சி அமைப்புகளும், மாநில அரசுகளும் தீர்த்திருக்க வேண்டிய பிரச்னைகளை கையாள்வதில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
தெருநாய்க்கடி விவகாரத்தில் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யும்படி நாங்கள் உத்தரவிட்டும் கூட, தலைமை செயலர்கள் எதுவுமே செய்யாமல் துாங்கிக் கொண்டிருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பே இல்லை.
அப்படியிருக்கையில், அவர்களுக்கு எந்த சலுகையும் தர முடியாது. நவ., 3ல், மேற்கு வங்கம், தெலுங்கானாவை தவிர்த்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்கள் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நேரடியாகவே அவர்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கறாராக கூறினர்.
இதற்கிடையே, பீஹாரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி, அம்மாநில தலைமை செயலர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், 'தேர்தல் பணிகளை தேர்தல் கமிஷன் கவனித்துக் கொள்ளும். தலைமை செயலர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டது.
-- டில்லி சிறப்பு நிருபர் -:

