8 நாய்குட்டிகள் இறந்த வழக்கில் மூதாட்டிக்கு அபராத தொகை அதிகரிக்க ஐகோர்ட் மறுப்பு
8 நாய்குட்டிகள் இறந்த வழக்கில் மூதாட்டிக்கு அபராத தொகை அதிகரிக்க ஐகோர்ட் மறுப்பு
ADDED : ஜன 18, 2024 04:58 AM
பெங்களூரு: எட்டு நாய்க்குட்டிகள் இறந்த வழக்கில், மூதாட்டிக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை அதிகரிக்க, கர்நாடகா உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பெங்களூரை சேர்ந்தவர் பொன்னம்மா, 74. இவரது வீட்டை ஒட்டிச் செல்லும் சாக்கடை கால்வாய் கரையோரம், 2016 மார்ச் 15ம் தேதி, எட்டு நாய்க்குட்டிகள் கிடந்தன. அந்த நாய்க்குட்டிகளை, தாயிடம் இருந்து பிரித்து வந்து, பொன்னம்மா வளர்த்து உள்ளார்.
ஆனால் எட்டு நாய்குட்டிகளும் அடுத்தடுத்து இறந்தன. இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஹரிஷ் அளித்த புகாரில், பொன்னம்மாவை போலீஸ் கைது செய்தது. இதுதொடர்பான வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்தது.
மேல்முறையீடு
வழக்கு விசாரணையின்போது தான் செய்த தவறை, பொன்னம்மா ஒப்புக்கொண்டார். இதனால் அவருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்து, 2019ல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அபராதம் செலுத்த தவறினால் 3 மாத சிறை தண்டனை என்றும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஹரிஷ் மேல்முறையீடு செய்தார். பொன்னம்மாவுக்கு கூடுதல் அபராதம் விதிக்க வேண்டும் என்றும், மனுவில் குறிப்பிட்டு இருந்தார். அந்த மனுவை நீதிபதி ஜே.எம்.காஜி விசாரித்து வந்தார். மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்.
நீதிபதி கூறுகையில், ''சம்பவம் நடந்தபோது, பொன்னம்மாவுக்கு 66 வயது. தற்போது 72 வயது. மூத்த குடிமகள் என்பதால், அவருக்கு விசாரணை நீதிமன்றம் 1,000 ரூபாய் அபராதம் விதித்து உள்ளது.
அவரும் தன் தவறை ஒப்புக்கொண்டார். தாய் நாயின் அரவணைப்பு இல்லாததால், எட்டு நாய்க்குட்டிகளும் இறந்ததாக கூறப்படுவதில் தெளிவு இல்லை. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட, இது பொருத்தமான வழக்கும் இல்லை. இதனால் பொன்னம்மாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை அதிகரிக்க முடியாது,'' என்றார்.