ஆசாராம் பாபுவின் தண்டனை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு
ஆசாராம் பாபுவின் தண்டனை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு
ADDED : மார் 01, 2024 11:18 PM

புதுடில்லி, மார்ச் 2-
பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் போலி சாமியார் ஆசாராம் பாபு, தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்த ஆசாராம், 82, மீது, 2013ல் பாலியல் புகார் அளித்தார். இந்த வழக்கில், அதே ஆண்டு செப்., 2ல் ஆசாராம் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில், 2018ல் தீர்ப்பளித்த ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றம், ஆசாராமுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்தது. இதன்படி அவர், 11 ஆண்டுகள் ஏழு மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், உடல்நிலையை கருதி தண்டனையை நிறுத்தி வைக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் ஆசாராம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மஹாராஷ்டிர மாநிலம் கோபோலியில் உள்ள மாதவ்பாக் இதய மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்ற அரசு வழக்கறிஞரின் ஆலோசனையை ஏற்க, ஆசாராம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்படி, ஆசாராம் தரப்புக்கு அறிவுறுத்தி, அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

