சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்ய தாமதம்; ஆம் ஆத்மி அரசுக்கு நீதிமன்றம் கண்டிப்பு
சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்ய தாமதம்; ஆம் ஆத்மி அரசுக்கு நீதிமன்றம் கண்டிப்பு
ADDED : ஜன 14, 2025 12:43 AM

புதுடில்லி : மதுபான கொள்கை உள்ளிட்டவை தொடர்பான, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கைகளை தாக்கல் செய்வதில் இழுத்தடிப்பு செய்ததற்காக, டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசை, டில்லி உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
குற்றச்சாட்டு
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கடந்த 2021 - 2022 நிதியாண்டில், மதுபான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது. இதில், பெரும் மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக, டில்லி முதல்வராக இருந்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
ஜாமினில் வெளிவந்த அவர், தன் பதவியை ராஜினாமா செய்து, ஆதிஷியை முதல்வராக்கினார்.
இதுதவிர, டில்லி முதல்வருக்கான இல்லத்தை புதுப்பிக்க, விதிமுறைகளை மீறி பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
டில்லி சட்டசபைக்கு அடுத்த மாதம், 5ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், மதுபான கொள்கை மோசடியால், டில்லி அரசுக்கு 2,026 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தவிர, மதுபான கொள்கையில் பல விதிமீறல்கள், மோசடிகள் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுபோல், முறையான ஒப்புதல்கள் பெறாமல், திட்டமிட்டதைவிட ஏழு மடங்கு அளவுக்கு, டில்லி முதல்வர் இல்ல புதுப்பிக்கும் பணிக்கு செலவிடப்பட்டதாகவும், சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இழுத்தடிப்பு
இவ்வாறு டில்லி அரசு நிர்வாகம் தொடர்பாக, 14 அறிக்கைகளை சி.ஏ.ஜி., வெளியிட்டுள்ளது. ஆனால், இவை சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை.
அதனால், சட்டசபை கூட்டத்தை உடனடியாக கூட்டி, சி.ஏ.ஜி., அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, பா.ஜ.,வைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ.,க்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று நடந்த விசாரணையின்போது, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா கூறியதாவது:
சி.ஏ.ஜி.,யின் அறிக்கைகளை, சட்டசபை சபாநாயகரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். மேலும், துணை நிலை கவர்னருக்கும் அனுப்பியிருக்க வேண்டும்.
சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதை தவிர்ப்பதற்காகவும், சட்டசபை கூட்டப்படுவதை தவிர்க்கவும், அறிக்கைகளை வெளியிடாமல், டில்லி அரசு இழுத்தடிப்பு செய்துள்ளது.
இந்த விஷயத்தில் காலதாமதம் செய்துள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது. இது அரசின் நோக்கத்தை, நேர்மை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார்.