வாரிசு இல்லாத தம்பதிக்கு நிவாரணம் அளித்த நீதிமன்ற தீர்ப்பு!
வாரிசு இல்லாத தம்பதிக்கு நிவாரணம் அளித்த நீதிமன்ற தீர்ப்பு!
ADDED : நவ 23, 2024 06:32 PM

கோல்கட்டா: 30 ஆண்டு காலமாக குழந்தை இல்லாத தம்பதி தொடர்ந்த வழக்கில் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மேற்கு வங்கம் கோல்கட்டாவின் காஷிபுர் பகுதியைச் சேர்ந்த 58 வயது நபருக்கும், 48 வயது கொண்ட பெண்ணுக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், இந்த தம்பதிக்கு தற்போது வரை குழந்தை இல்லை.
தங்களுக்கு வாரிசு வேண்டும் என்று விரும்பிய இந்த தம்பதி, ஐ.வி.எப்., எனப்படும் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தனர். இதற்காக, அவர்கள் கருத்தரிப்பு மையத்தை அணுகியுள்ளனர்.
ஆனால், கருத்தரிப்பு செய்து கொள்ளும் பெண்ணின் கணவரின் வயது 55க்குள் இருக்க வேண்டும் என்ற மாநில சுகாதாரத்துறையின் விதியைக் காரணம் காட்டி, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கருத்தரிப்பு மையம் மறுத்துள்ளது. இதனால், அந்த தம்பதியின் குழந்தை கனவு சுக்குநூறானது.
இதையடுத்து, வயது உச்சவரம்பை எதிர்த்து இந்த தம்பதி கோல்கட்டா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதி சின்ஹா, சம்பந்தப்பட்ட தம்பதிக்கு கருத்தரிப்பு செய்வதற்கான சிகிச்சையை மேற்கொள்ள அனுமதியளித்தார். மேலும், சுகாதாரத்துறையும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு இவர்களுக்கு மட்டுமல்லாது, இதுபோன்று குழந்தை ஆசையுள்ள தம்பதிகளுக்கும் சேர்த்து தான் என்று நீதிபதி கூறியுள்ளார். இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றனர்.