ராகுலின் குடியுரிமை வழக்கு: அரசிடம் விளக்கம் கேட்ட கோர்ட்
ராகுலின் குடியுரிமை வழக்கு: அரசிடம் விளக்கம் கேட்ட கோர்ட்
ADDED : டிச 06, 2024 10:55 PM

புதுடில்லி, காங்கிரஸ் எம்.பி., ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவுப்படுத்துமாறு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுப்ரமணிய சுவாமி சார்பில் வழக்கறிஞர் சத்யா சபர்வால், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், தான் ஒரு பிரிட்டன் பிரஜை என்றும், அந்த நாட்டுக்கான பாஸ்போர்ட் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
'இது, இந்திய அரசியல் சாசன சட்டம் 9வது பிரிவிக்கு எதிரானது. இந்திய குடியுரிமை சட்டத்தின்படி, அவர் இந்திய குடிமகன் என்ற தகுதியை இழந்துவிட்டார். விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினேன். இதற்கு எந்த பதிலும் வரவில்லை.
'என் புகார் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுவரை ஆஜரான வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளதால், வேறு ஒருவரை நியமிக்க அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'ராகுலின் குடியுரிமை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்க வேண்டும்' என மத்திய அரசைக் கேட்டுகொண்டது. விசாரணை, அடுத்த மாதம் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.