ராகுல் மீதான அவதுாறு வழக்கு விசாரணைக்கு கோர்ட் தடை
ராகுல் மீதான அவதுாறு வழக்கு விசாரணைக்கு கோர்ட் தடை
ADDED : ஜன 21, 2025 12:29 AM

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதுாறு வழக்கு விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா என்ற இடத்தில், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக காங்., - எம்.பி., ராகுல் பிரசாரம் செய்தார்.
அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கொலைகாரன் என்று அவர் விமர்சித்தார். இதையடுத்து, பா.ஜ.,வை சேர்ந்த நவீன் ஜா என்பவர் ராகுல் மீது அவதுாறு வழக்கு தொடுத்தார்.
ராகுலை நேரில் ஆஜராகும்படி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்தார்.
ராகுல் அவதுாறாக பேசியதற்கு முகாந்திரம் இருப்பதாக கூறிய உயர் நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ராகுல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ''அவதுாறுக்கு நேரடியாக சம்பந்தப்படாத மூன்றாவது நபரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவதுாறு குற்றத்தின் கீழ் சட்டப்பூர்வமாக இது அனுமதிக்கப்படாது,'' என, வாதிட்டார்.
இதையடுத்து, ராகுல் மனு மீது பதில் அளிக்கும்படி ஜார்க்கண்ட் அரசு மற்றும் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.