சிறந்த துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இருப்பார்: பிரதமர் மோடி
சிறந்த துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இருப்பார்: பிரதமர் மோடி
ADDED : செப் 08, 2025 10:40 PM

புதுடில்லி: தேஜ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறந்த துணை ஜனாதிபதியாக இருப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதி தேர்தல் நாளை( செப்.,09) நடைபெற உள்ளது. இதில் எப்படி செயல்படுவது என்பது குறித்து பாஜ எம்பிக்களுக்கு பயிற்சி நடந்தது. இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேஜ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: டில்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றேன். இதில் தேஜ கூட்டணி குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர். துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி. ராதா கிருஷ்ணன் அனைவரிடமும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளார். அவர் சிறந்த துணை ஜனாதிபதியாக இருப்பார் என்றும், தனது அறிவு மற்றும் நுண்ணறிவால் துணை ஜனாதிபதி பதவியை வளப்படுத்துவார் என்றும் மக்கள் நம்புகிறார்கள். இவவாறு அவர் கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக வெளியான தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: உள்நாட்டு பொருட்களை ஊக்குவிக்க தேசிய ஜனநாயக எம்பிக்கள், 'சுதேசி மேளா'விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி மறுசீரமைப்பு தொடர்பாக வர்த்தகர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். மத்திய அரசு எடுத்த ஜிஎஸ்டி குறைப்பு மூலம் ஒரு அலை உருவாகி உள்ளது. இதனை கூட்டங்கள் நடத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மேட் இன் இந்தியா தயாரிப்பை ஊக்கப்படுத்த எம்பிக்கள் தங்களது தொகுதிகளில் சிறப்பு கண்காட்சியை நடத்த வேண்டும். துணை ஜனாதிபதி தேர்தலில் எம்பிக்கள் அனைவரும் தங்களது ஓட்டை சரியான முறையில் பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு ஓட்டும் வீணாகக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.