ADDED : செப் 30, 2024 06:15 AM

புதுடில்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழு ஒருங்கிணைப்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூ.,வில், முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்த அமைப்பாக பொலிட் பீரோ எனப்படும் அரசியல் குழு உள்ளது.
இந்நிலையில், கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழு ஒருங்கிணைப்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்தை நியமித்து, டில்லியில் நேற்று நடந்த சி.பி.எம்., மத்திய குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., வெளியிட்ட அறிக்கை: கட்சியின் தேசிய மாநாடு, அடுத்த ஆண்டு ஏப்ரலில் மதுரையில் நடைபெறுகிறது. இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலராக இருந்த சீதாராம் யெச்சூரியின் திடீர் மறைவை தொடர்ந்து இடைக்கால ஏற்பாடாக, கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழு ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரகாஷ் காரத் கடந்த 2005 முதல் 2015 வரை கட்சி பொதுச்செயலராக பதவி வகித்துள்ளார். மேலும் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக 1985லும், 1992ல் அரசியல் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

