'மஹா விகாஸ் அகாடி' கூட்டணியில் விரிசல் ! தனித்து போட்டியிட உத்தவ் முடிவு
'மஹா விகாஸ் அகாடி' கூட்டணியில் விரிசல் ! தனித்து போட்டியிட உத்தவ் முடிவு
ADDED : ஜன 11, 2025 11:35 PM

நாக்பூர்: மஹாராஷ்டிராவில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார். 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணியில் இடம் பெற்றுள்ள அவர், தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளதால், கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் அதிகமாகி உள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி, பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற இந்த கூட்டணி, நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்தது. 50க்கும் குறைவான இடங்களை மட்டுமே கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத நிலையில், மஹா விகாஸ் அகாடி கூட்டணி உள்ளது.
கூட்டணியில் அதிகபட்சமாக, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, 20 தொகுதிகளை கைப்பற்றியது. சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
சம்மதிக்கவில்லை
தேசிய அளவில் பா.ஜ.,வை எதிர்க்க, 'இண்டி' கூட்டணி உருவாக்கப்பட்டது. இக்கூட்டணியில் பெரிய கட்சியாக காங்., உள்ள நிலையில், அக்கூட்டணியின் தலைமை பொறுப்பை அக்கட்சிக்கு வழங்க கூட்டணி கட்சிகள் சம்மதிக்கவில்லை.
காரணம், காங்கிரசின் செயல்பாடு. உட்கட்சி பூசல் மற்றும் வரிசையாக மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வி ஆகியவற்றால், காங்., மீது, இண்டி கூட்டணி கட்சிகளிடையே நம்பிக்கை இல்லை.
இண்டி கூட்டணியில், கூட்டணி கட்சிகளிடையே எதிர்ப்பை காங்., சம்பாதித்து வரும் நிலையில், அக்கட்சியிடம் கலந்து ஆலோசிக்காமல், மஹாராஷ்டிராவில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அறிவித்துள்ளது.
இது குறித்து, உத்தவ் தாக்கரேயின் நெருங்கிய ஆதரவாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் நேற்று கூறியதாவது:
லோக்சபா, சட்டசபை தேர்தல்களுக்காகவே, மஹா விகாஸ் அகாடி கூட்டணி உருவாக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் என்பது கட்சியின் அடிப்படை தொண்டர்களுக்கானது.
இது, கட்சியின் வளர்சிக்கு மிகவும் முக்கியம். இதனால், மஹாராஷ்டிராவில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
உரிமை இல்லை
இதையே உத்தவ் தாக்கரே விரும்புகிறார். மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாததற்கு, காங்கிரசே காரணம்.
தோல்வியை ஏற்காமல் பழி சுமத்தும் விளையாட்டில் அக்கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒருமித்த கருத்து மற்றும் சமரசத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட்டணியில் இருக்க உரிமை இல்லை.
லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், இண்டி கூட்டணி ஒரு கூட்டத்தை கூட நடத்தவில்லை. கூட்டணியில் பெரிய கட்சியான காங்., அதற்கான வேலைகளில் கூட ஈடுபடவில்லை.
பொறுப்புள்ள கட்சியாக, கூட்டத்தை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி எதுவுமே செய்யாமல் பொம்மையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.