நிலை தடுமாறிய ஹெலிகாப்டர்: உயிர் தப்பிய அமித்ஷா: வீடியோ வைரல்
நிலை தடுமாறிய ஹெலிகாப்டர்: உயிர் தப்பிய அமித்ஷா: வீடியோ வைரல்
UPDATED : ஏப் 29, 2024 06:24 PM
ADDED : ஏப் 29, 2024 05:05 PM

பாட்னா: மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் சென்ற ஹெலிகாப்டர் புறப்படும்போது சற்று நிலை தடுமாறி காற்றில் இழுத்துச் செல்லப்பட்டது. சுதாரித்துக்கொண்ட பைலட் சாதுரியமாக இயக்கியதால், அமித்ஷா உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.
7 கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்ட தேர்தல் மே 7ல் நடக்க உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் பீஹார் மாநிலம் பெகுசாராய் பகுதியில் பிரசாரம் முடித்து மத்திய அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டரில் கிளம்பினார். அப்போது சற்று மேல் எழும்பிய ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து சிறிது தூரம் காற்றில் இழுத்து செல்லப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சில வினாடிகளில் ஹெலிகாப்டரை கட்டுக்குள் கொண்டுவந்த பைலட் சிறப்பாக செயல்பட்டு, மேலே பறக்கும் வகையில் இயக்கினார். பின்னர் ஹெலிகாப்டர் அங்கிருந்து பறந்து சென்றது.

