துறைமுகங்கள் பாதுகாப்புக்கு புதிய அமைப்பு உருவாக்கம்
துறைமுகங்கள் பாதுகாப்புக்கு புதிய அமைப்பு உருவாக்கம்
ADDED : ஜன 02, 2026 12:06 AM

விமான நிலையங்களில் உள்ள அதிநவீன உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை போல், நாட்டில் உள்ள துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த, 'போப்ஸ்' எனப்படும் புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் வாயிலாக, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை தடுப்பதுடன், பயணியரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.
நாடு முழுதும் சிறியதும், பெரியதுமாக 200 துறைமுகங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 65ல் மட்டும் சரக்கு களை கையாளும் பணிகள் நடந்து வருகின்றன.
முக்கிய நகரங்களில் உள்ள மிகப் பெரிய 13 துறைமுகங்களில் மட்டும், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிற துறைமுகங்களில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளன.
அச்சுறுத்தல்
இதனால், நாட்டில் உள்ள முக்கியமான சர்வதேச அந்தஸ்து உள்ள துறைமுகங்களில், கடத்தல் உட்பட பல்வேறு சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன.
பார்லி.,யில், இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், '2020 - 24ம் ஆண்டு காலகட்டங்களில், உரிய பாதுகாப்பின்றி செயல்பட்ட துறைமுகங்கள் வாயிலாக, 11,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்தப்பட்டன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், முக்கிய துறைமுகங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும், சில கப்பல்களை கடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், சில மாதங்களுக்கு முன் மத்திய அரசை உளவுத் துறை எச்சரித்திருந்தது.
'போப்ஸ்' அமைப்பு
இந்நிலையில், துறைமுகங்களின் பாதுகாப்புக்கு என்று தனி அமைப்பு துவங்கப்படும் என, கடந்த மாதம் 19ல் மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, 'போப்ஸ்' எனப்படும், 'பீரோ ஆப் போர்ட்ஸ் செக்யூரிட்டி' என்ற துறைமுகங்களின் பாதுகாப்பு வாரியம் துவங்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வர்த்தக கப்பல் போக்குவரத்து சட்டம், 2025ன், 13வது பிரிவின் கீழ், இந்த சட்டப்பூர்வ அமைப்பு உருவாக்கப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த அமைப்பு குறித்து மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புக்கு என, 1987 முதல், 'பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. விமானங்கள், விமான நிலையங்கள் என அனைத்துக்குமான பாதுகாப்பை, இந்த அமைப்பு கட்டுப்படுத்தி வருகிறது.
அதேபோல், துறைமுகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 'போப்ஸ்' அமைப்பு துவங்கப்பட உள்ளது.
டில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பில், ஐ.பி.எஸ்., அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர், இயக்குநர் ஜெனரலாக தலைமை வகிப்பார்.
இவருக்கு கீழ், இரு கூடுதல் இயக்குநர் ஜெனரல்களும், துணை இயக்குநர் ஜெனரல்களாக பலரும் நியமிக்கப்பட உள்ளனர்.
உறுதி செய்யும்
மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, நாடு முழுதும் உள்ள துறைமுகங்கள், அவற்றின் கட்டமைப்புகள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து பணிகளையும் கண்காணித்து, அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
பயங்கரவாத தாக்குதல்கள், சைபர் உலக அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்பங்களுடனான பயிற்சிகள் தந்து உருவாக்கப்படும் திறமையான வீரர்கள், துறைமுகங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -:

