UPDATED : அக் 15, 2025 06:30 PM
ADDED : அக் 15, 2025 06:29 PM

ராஞ்சி: 2040 ல் இந்தியர்கள் நிலவில் தரையிறங்க செய்வதற்கு இஸ்ரோ உறுதி பூண்டுள்ளது என அந்த அமைப்பின் தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2040ம் ஆண்டுக்குள் நிலவில் மனிதர்களை தரையிறக்கி, அவர்களை பத்திரமாக அழைத்து வருவதிலும், 2027 ல் ககன்யான் திட்டத்திலும் இஸ்ரோ உறுதியாக உள்ளது.
இதற்கான வழிகாட்டுதல்களை பிரதமர் கொடுத்துள்ளார். வெள்ளிக் கிரகத்தை ஆய்வு செய்வதற்கான திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2035 ம் ஆண்டில் இந்தியாவிற்கு என சொந்தமான விண்வெளி நிலையம் அமைக்கப்படும். அதற்கான சாதனங்கள் 2027 ம் ஆண்டில் அனுப்பப்படும்.
ககன்யான் திட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் நிறைய சோதனைகளை மேற்கொள்ள உள்ளோம். இதற்கு முன்னர் மூன்று ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்பட உள்ளன. இந்தாண்டு டிசம்பரில் வாயுமித்ரா ஏவப்பட உள்ளது. அடுத்தாண்டு இன்னும் இரண்டு விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. 2027 ம் ஆண்டு முதல் காலாண்டில் ககன்யான் திட்டம் சாத்தியமாகும்.
சீர்திருத்தத்துக்கான திட்டங்கள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளதால், சுயசார்பு மற்றும் துடிப்பான விண்வெளி திட்டங்கள் என்ற நிலையை நோக்கி இஸ்ரோ தன்னம்பிக்கையுடன் முன்னேறுகிறது.சந்திரயான் 4, சந்திரயான்5, செவ்வாய் கிரக ஆய்வு உள்ளிட்டவை இஸ்ரோவின் முக்கியமான திட்டங்கள் ஆகும்.
சுயசார்பு என்ற நிலையில் இந்தியா உறுதியாக உள்ளது என்றாலும், பருவநிலை அறவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்புக்கு இஸ்ரோ தயாராக உள்ளது.
கடந்த சில ஆண்டுகள் வரை விண்வெளித்துறையில் ஒன்று அல்லது இரண்டு ஸ்டார்ட் அப்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று 300க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அபு்கள் உள்ளன. அவை செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவும் பணி மற்றும் விண்வெளி சார்ந்த தகவல்களை ஆய்வு செய்கின்றன. விவசாயம், பேரிடர் மேலாண்மை, தொலைத்தொடர்பு, ரயில் மற்றும் வாகன கண்காணிப்பு மற்றும் மீன்வளம் ஆகியவற்றில் செயற்கைக்கோள் அடிப்படையிலான பயன்பாடுகளுக்கு அதிகரித்து வரும் இந்தியாவின் தேவையை இவை பூரத்தி செய்யும்.கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கணிப்பொறி புரட்சியை யாரும் கற்பனை செய்யாத நிலையில், அடுத்த தலைமுறை விண்வெளி ஆய்வுகளை செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியன வரையறுக்கும்.
சந்திரயான் 1 மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்த நாம், சந்திரயான் 3 மூலம் நிலவின் தெற்கு பகுதியில் முதலில் ' Soft Landing' முறையில் தரையிறங்கினோம். விண்வெளித்துறையில் இந்தியா ஏராளமான சாதனைகளை படைத்துள்ளது. சர்வதேச அளவில் 9 துறைகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.