மனைவிக்கு ரூ.4 லட்சம் மாதம் தோறும் வழங்க கிரிக்கெட் வீரருக்கு உத்தரவு
மனைவிக்கு ரூ.4 லட்சம் மாதம் தோறும் வழங்க கிரிக்கெட் வீரருக்கு உத்தரவு
ADDED : ஜூலை 03, 2025 12:54 AM

கொல்கட்டா: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான முகமது ஷமி, தன் முன்னாள் மனைவி மற்றும் மகளுக்கு மாதந்தோறும் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க, கொல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் முகமது ஷமி. இவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். கடந்த, 2014ல் ஹசின் ஜஹான் என்பவரை முகமது ஷமி திருமணம் செய்தார்.
இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. வரதட்சணை கேட்டு ஷமி துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் அவர் மீது மனைவி ஹசின் ஜஹான் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, 2018ல் இருவரும் விவாகரத்து பெற்றனர். முகமது ஷமி, தன் முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் 50,000 ரூபாயும், மகளின் பராமரிப்பு செலவுக்கு 80,000 ரூபாயும் வழங்க வேண்டும் என, அலிப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், இதை எதிர்த்து ஹசின் ஜஹான், மாதந்தோறும் 10 லட்சம் ரூபாயை முகமது ஷமி வழங்க உத்தரவிடும்படி கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஜோய் குமார் முகர்ஜி தலைமையிலான அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு:
முகமது ஷமி, தன் முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் 1.5 லட்சம் ரூபாயும், மகளுக்கு 2.5 லட்சம் ரூபாயும் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். இது, ஷமியின் வருவாய், அவரது மகளின் எதிர்காலம் மற்றும் இருவரும் பிரியும் முன் அவரது மனைவி ஹசின் ஜஹான் அனுபவித்த வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் வைத்து, இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.