சூதாட்ட செயலி விளம்பர விவகாரம் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஈ.டி., முன் ஆஜர்
சூதாட்ட செயலி விளம்பர விவகாரம் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஈ.டி., முன் ஆஜர்
ADDED : செப் 05, 2025 12:30 AM

புதுடில்லி: 'ஆன்லைன்' சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், நேரில் ஆஜரான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவானிடம், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
நம் நாட்டில் சட்டவிரோத சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. 'மொபைல் போன்' புழக்கத்துக்கு பின், சூதாட்ட செயலிகள் அதிகரித்துள்ளன.
இந்த செயலிகள், மக்களையும், முதலீட்டாளர்களையும் ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பான விசாரணையை அமலாக்கத் துறை முடுக்கிவிட்டுள்ளது.
அந்த வகையில், '1 எக்ஸ் பெட்' என்ற சூதாட்ட செயலி, சமூக ஊடகங்கள் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக மக்களை சூதாட்டத்தில் ஈடுபட வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பல இந்திய கிரிக்கெட் வீரர்களும், இந்த செயலியை விளம்பரப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள், விளம்பரத்தின் போது, ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கையில் பங்கேற்றது குறித்தும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும், இந்த செயலியை விளம்பரப்படுத்திய நிலையில், அவருக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
செயலியை விளம்பரம் செய்தது குறித்தும், இதற்கு சம்பளம் பெறப்பட்டது குறித்தும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் கூறப்பட்டது.
இதையடுத்து, டில்லியில் உள்ள அலுவலகத்தில் அவர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நிதி அகர்வால், பிரணிதா உட்பட 25 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இது போல் ஆன்லைன் சூதாட்ட செயலி வாயிலாக 2,000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டியதாக கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., கே.சி.வீரேந்திராவை, அமலாக்கத் துறை சமீபத்தில் கைது செய்தது.
ஆன்லைனில் பணம் வைத்து விளையாடப்படும் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் வகையில், ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.
இதையடுத்து, சட்டவிரோத சூதாட்டம் தொடர்பான வழக்குகளில் அமலாக்கத் துறை தீவிரம் காட்டி வருகிறது.