கிரிமினல் மீது 'என்கவுன்டர்'
புதுடில்லி:பல வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நபரை, 'என்கவுன்டர், முறையில் சுட்டு பிடித்தனர்.
டில்லியின் நரேலா தொழில் பகுதியில் கறுப்பு நிற ஸ்கூட்டரில், சந்தேகத்திற்கு இடமான முறையில் கிரிமினல் ஒருவர் நடமாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலையில், அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.
போலீசாரை கண்டதும், துப்பாக்கியால் அவர்கள் மீது சுட்டபடி தப்பியோட முயற்சித்த அப்தாப் ஆலம் என்ற அட்டியை, காலுக்கு கீழே சுட்டு வீழ்த்தினர். அதன் பின், அவரை பிடித்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
அதில், டில்லியில் உள்ள பவானா என்ற இடத்தை சேர்ந்த அந்த நபர், திருட்டு கைத்துப்பாக்கியை வைத்து பொதுமக்களை மிரட்டி வந்தார். அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
சவரத்தொழிலாளி கொலை
புதுடில்லி:வட கிழக்கு டில்லியின் காஜோரி சவுக் என்ற பகுதியில் சவரத் தொழிலாளி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, இறந்த நிலையில் உடல் கிடந்தது. தகவலின் படி, அங்கே சென்ற போலீசார், நேற்று முன்தினம் இரவிலேயே, இறந்து கிடந்தது கஜேந்தர், 34, சவரத் தொழிலாளி என்பதை கண்டறிந்தனர். மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட அந்த நபர், தயாள்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர். காஜோரி சவுக் பகுதியில் சவரம் செய்து வந்தார்.
அவரை கொன்றவர்கள் யார் என போலீசார் விசாரிக்கின்றனர். அவர் உடல் கிடந்த பகுதியில், ரசாயன தடயவியல் சோதனையை வல்லுநர்கள் மேற்கொண்டனர்.
மயங்கியவரை காத்த போலீசார்
புதுடில்லி:பாராகாம்பா சாலையில் பேச்சு, மூச்சின்றி மயங்கிய நிலையில், 26 வயது வாலிபர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், ரோஹித் என்ற அந்த மயங்கிய நபரை மீட்டு, அவரின் நாடித்துடிப்பை கவனித்தனர்; அறவே இல்லை.
உடனடியாக அந்த இளைஞருக்கு, சி.பி.ஆர்., எனும் மார்பை தொடர்ந்து கைகளால் அழுத்தும் சிகிச்சை அளித்தனர். அதையடுத்து, அந்த நபர் லேசாக கண்விழித்து பார்த்ததும், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஆக்சிஜன் கருவியை திறந்து, ஆக்சிஜனை சுவாசிக்க வைத்தனர்.
அடுத்த சில நிமிடங்களில், அந்த வாலிபர் உயிர் பிழைத்தார். அவரை, மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை அளித்தனர். மறுநாள் அவர் சரியாகி விட்டதாக, டாக்டர்கள் கூறினர். மயங்கி கிடந்தவரை காப்பாற்றிய ஏட்டு நீரஜ் சிங் பாகேல், டிரைவர் அசோக்கை பலரும் பாராட்டினர்.