2 வங்கிகளை ஏமாற்றிய நபர் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது
புதுடில்லி:ஒரே சொத்து விவரத்தை இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்து, இரண்டு வங்கிகளையும் ஏமாற்றி வந்தவரை பல ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்கு பின், டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தானின் பாரத்பூர் என்ற பகுதியை சேர்ந்த தீரஜ்குமார் என்ற பர்வேஷ் சர்மா என்பவர், 2019ல், தனக்கு சொந்தமானதாக கூறி, ஒரே சொத்து தொடர்பான ஆவணங்களை, இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்தார்.
இதன் மூலம், 50 லட்ச ரூபாயை அவர் பெற்று, இரு வங்கிகளையும் ஏமாற்றி வந்தார். கடந்த, 2007ல், டில்லிக்கு இடம்பெயர்ந்த அவர், சொத்து ஆவணங்களை திருத்தி, இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
அவரை ராஜஸ்தானின் பாரத்பூரில் கைது செய்துள்ள டில்லி போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் சோதனை
புதுடில்லி: தலைநகர் டில்லியில், மூன்று பள்ளிகளில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக, இ - மெயில் மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த தகவல் கிடைத்த போலீசார், அந்த பள்ளிகளான சாணக்யபுரியில் உள்ள பிரிட்டீஷ் பள்ளி, பாராகாம்பாவில் உள்ள மாடர்ன் ஸ்கூல் உள்ளிட்ட பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது.
அதையடுத்து, அந்த பள்ளி வளாகங்களில் கூடுதல் போலீசார் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் போலீசார் குவிக்கப்பட்டு, அந்த இடம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.
எனினும், அந்த இடங்களில் எந்த ஆபத்தான பொருட்களும் கைப்பற்றப்படாததால், போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். எனினும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு 3 சிறார்களிடம் விசாரணை
புதுடில்லி: அவுட்டர் டில்லியின் ரனோலா என்ற இடத்தில், 18 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக, மூன்று சிறார்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, அவுட்டர் டில்லியின் ரனோலா பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் இறந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து, விசாரணை மேற்கொண்டதில், கொல்லப்பட்டவர் பெயர் நிதின் என்பதும், அவரின் தந்தை காய்கறி வியாபாரி என்பதும், அந்த நபர் பர்னிச்சர் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதும் தெரிந்தது.
பள்ளியிலிருந்து இடை நின்ற அந்த நபர், மோகன் கார்டன் என்ற பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் இருந்த போது, அங்கு வந்த மூன்று சிறார்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
அந்த மூன்று சிறார்களை சுற்றி வளைத்து கைது செய்துள்ள போலீசார், எதற்காக அவர்கள் நிதினை சுட்டனர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
ராணுவத்தில் அதிகாரி என கூறி பலரை ஏமாற்றி வந்தவர் கைது
நொய்டா: ராணுவ அதிகாரி என கூறி, மத்திய அரசின் வெளிநாட்டு உளவு அமைப்பான, 'ரா'வில் பணியாற்றுவதாக கூறி, பலரை ஏமாற்றி வந்த, 37 வயது நபரை நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதானவர் பெயர் சுனித்குமார். இவரிடம் இருந்து, ரா உளவு அமைப்பில் பணியாற்றுவது போன்ற போலி அடையாள அட்டைகள், ராணுவத்தில் மேஜராக பணியாற்றுவது போன்ற போலி அடையாள அட்டை உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பீஹாரின் வைசாலி மாவட்டத்தை சேர்ந்த இவர், கிரேட்டர் நொய்டாவின் சூரஜ்பூர் என்ற இடத்தில் வசித்து வந்தார். அவரின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொண்ட போலீசார், கடந்த செவ்வாய் கிழமை இரவில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ராய்ப்பூரில் உள்ள கலிங்கா பல்கலைக்கழகத்தில் கிளினிகல் சைக்காலஜி பாடத்தில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ள இவர், ராணுவத்தில் பணியாற்றுவதாக கூறி, பலரை ஏமாற்றி வந்துள்ளார்.
அவரின் வங்கிக்கணக்கை முடக்கியுள்ள போலீசார், தொடர்ந்து, விசாரிக்கின்றனர்.
கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்ததில் நால்வர் பலி
நொய்டா: கிரேட்டர் நொய்டாவில், கட்டப்பட்டு வந்த வீடு திடீரென இடிந்து விழுந்ததில், ஒருவர் சம்பவ இடத்திலும், மூன்று பேர் மருத்துவமனையிலும் இறந்தனர்.
கிரேட்டர் நொய்டாவின் ராபுபுரா அருகே உள்ள நக்லா ஹுகும் சிங் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் மஹாவீர் சிங் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மூன்றாவது மாடியில் பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டுஇருந்தனர்.
அப்போது, திடீரென ஒட்டுமொத்த கட்டடமும் இடிந்து விழுந்தது. இதில், ஒருவர் சம்பவ இடத்திலும், பிற மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் இறந்தனர்.
மேலும், கவுதம் புத்தா நகர் பகுதியை சேர்ந்த டேனிஷ், 21, மற்றும் பர்தீன், 18, ஆகிய இரு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை, ஜீவார் தொகுதி எம்.எல்.ஏ., திரேந்திர சிங் பார்வையிட்டு, ஆறுதல் கூறினார்.

