
மாணவர் தற்கொலை
உடுப்பி மாவட்டம், பிரம்மாவர் ரங்கனகெரேயில் இஸ்லாமியர்களுக்கான மதரசா உள்ளது. இங்கு தங்கி படித்து வந்த சித்தாபூரைச் சேர்ந்த ரிஹானா பேகம் மகன் முகம்மது ஜாஹித், 12. நேற்று முன்தினம் இரவு விடுதியின் குளியல் அறையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, பிரம்மாவர் போலீசில் தாய் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
போதை பறிமுதல்
பெங்களூரில் இருந்து சிக்கமகளூரு மாவட்டத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக, போதைப்பொருள் ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சிக்கமகளூருக்குள் நுழையும் வாகனங்களை போலீசார் சோதனையிட்டனர். அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, 1.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த சிக்கமகளூரைச் சேர்ந்த அமீத், யாகூப், நவாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கார் கவிழ்ந்து மூதாட்டி பலி
தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடியில் இருந்து மங்களூரு நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. பன்ட்வாலாவின் பாம்பிலா அருகே வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த கோடியாலுபைலுவைச் சேர்ந்த பாகீரதி, 62, என்ற மூதாட்டி உயிரிழந்தார். காரில் பயணம் செய்த மற்ற இருவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் 3 பேர் பலி
ராய்ச்சூர் மாவட்டம், மணவியில் ராய்ச்சூர் நகரை நோக்கிச் சென்ற காரும், ராய்ச்சூர் நகரில் இருந்து மணவி நோக்கிச் சென்ற லாரியும் கல்லுார் கிராமம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், காரில் பயணம் செய்த ராய்ச்சூரின் மெக்கானிக்குகளான மக்புல், 34, யாசின், 35, அப்ரோஸ், 34, ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

