மனைவி கொலை
ஷிவமொக்கா, ஷிகாரிபுராவின் அம்ப்ளிகோளா கிராமத்தில் வசிப்பவர் மனோஜ், 30. இவரது மனைவி கவுரம்மா, 26. குடும்ப பிரச்னையால், நேற்று மதியம் தம்பதி இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது குடிபோதையில் இருந்த மனோஜ், மனைவியை தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். கணவரை போலீசார் கைது செய்தனர்.
காரில் தீ
சிக்கபல்லாபூர், சிந்தாமணியின் மாடப்பள்ளி லே - அவுட்டில், உயர் கல்வித்துறை அமைச்சர் சுதாகரின் வீட்டு அருகில், ஸ்கார்பியோ கார் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று மாலை கார் தீப்பிடித்து சேதமடைந்தது. காரின் உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை. தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.
மாணவர் உயிரிழப்பு
மாண்டியா, மத்துாரின் சோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த யஷ்வந்த், 22, பொறியியல் படித்து வந்தார். இவர் நேற்று மதியம் இரு நண்பர்களுடன், எலியூர் அருகில் உள்ள, விஸ்வேஸ்வரய்யா கால்வாய்க்கு வந்தனர். கால்வாயில் இறங்கினர். மூவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த அப்பகுதியினர், இருவரை காப்பாற்றினார். யஷ்வந்த் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தேடும் பணி நடக்கிறது.
இளைஞர் தற்கொலை
பெங்களூரு ரூரல், நெலமங்களாவின் சிவகங்கையில் வசித்தவர் சந்தோஷ், 20. இவர் அதே கிராமத்தின் இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்தார். அவரது வீட்டுக்குச் சென்றும் தொல்லை கொடுத்தார். இதனால் இளம்பெண்ணின் குடும்பத்தினர், போலீசில் புகார் செய்தனர். மனம் நொந்த சந்தோஷ், தான் பணியாற்றிய ஷாமியானா கடையில், நேற்று துாக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பெண் கொலை
பெங்களூரு, பொம்மனஹள்ளியின், ஹொங்கசந்திராவில் ஜெயம்மா, 45, தனியாக வசித்து வந்தார். நேற்று அதிகாலை இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. போலீசார் விசாரிக்கின்றனர்.