தாய், மகள் தற்கொலை
சித்ரதுர்காவில் பசவராஜ், கீதா, 45, தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு லாவண்யா, 17, என்ற மகள் இருந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர், பசவராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். தாயும், மகளும் ஆழ்ந்த சோகத்தில் நாட்களை கழித்து வந்தனர். சோகம் தாங்க முடியாமல் சில தினங்களுக்கு முன், வீட்டிலே தாயும், மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அண்டை வீட்டார், அவர்கள் வீட்டை பார்த்தனர். தாய், மகள் உடல்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மோசடி கும்பல் கைது
ராஜாஜி நகரை சேர்ந்தவர்கள், ஸ்ரீதர், 35, ரமேஷ், 36, சிவலிங்கம், 30, சந்திரகுமார், 30. இவர்கள் போலியான நிறுவனங்கள் பேரில் இ.எஸ்.ஐ., கார்டுகள் தயாரித்து 20 ஆயிரம் ரூபாய்க்கு 859 கார்டுகள் விற்றுள்ளனர். இந்த கார்டின் மூலம் குறிப்பிட்ட மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெறலாம் என கூறியிருந்தனர். சி.சி.பி., போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்தனர். நான்கு லேப் டாப்கள், 10 மொபைல் போன்கள், 59 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
பிரசவத்தில் தாய் பலி
பெலகாவி, நாகனுார் தண்டாவைச் சேர்ந்தவர் பரந்தி கல்பனா ரத்தோடா, 28. இவர் பிரசவத்திற்காக தி.நகரில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலை குழந்தை பிறந்துள்ளது. தாய், குழந்தை இருவரும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். சிறிது நேரம் கழித்து தாயின் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறியுள்ளனர். வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. இதன் பின், தாய் உயிரிழந்தாக கூறியுள்ளனர். இருமுறை ஆப்பரேஷன் செய்ததால், பரந்தி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். டாக்டரின் கவனக்குறைவால் அவர் இறந்துள்ளதாகவும், அவரை பணிநீக்கம் செய்யக்கோரியும் போராட்டம் நடத்தினர்.

