தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கிரைம் கார்னர்: புதுடில்லி

 கிரைம் கார்னர்: புதுடில்லி

 கிரைம் கார்னர்: புதுடில்லி


ADDED : ஏப் 15, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாலையில் கார் விபத்து குழந்தை பரிதாப பலி



புதுடில்லி: அவுட்டர் நார்த் டில்லியின் அலிப்பூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது, பின்னால் வந்த சொகுசு கார் வேகமாக மோதியதில், தாயின் மடியில் இருந்த 2 வயது குழந்தை பறந்து சென்று, தரையில் மோதியதில் இறந்தது. கார் மீது மோதிய சொகுசு காரின் டிரைவர் தப்பியோடி விட்டார்.

ரவிந்திர சிங், 47, என்பவர், தன் குடும்பத்தை சேர்ந்த, நான்கு பேருடன், ஹரியானாவின் சோனிபட் என்ற பகுதியில் இருந்து, காரில் டில்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த காரின் பின்னால், டொயோட்டா பார்ச்சூனர் கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.

அந்த சொகுசு கார், முன்னாள் சென்று கொண்டிருந்த காரின் மீது பின்புறமாக மோதியது. இதில், காரில் ஏசி சரியாக வேலை பார்க்கவில்லை என்பதற்காக, ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து பயணம் செய்து கொண்டிருந்தனர்.

மோதிய வேகத்தில், தாயின் மடியில் இருந்த, 2 வயது குழந்தை பறந்து சென்று, தரையில் விழுந்தது. இதில், அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது.

குழந்தை காரில் அடிபட்டது என்பதை அறிந்ததும், சொகுசு காரை ஓட்டி வந்த டிரைவர், காரை அங்கேயே நிறுத்தி விட்டு, அங்கிருந்து தப்பினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தாதா கோஷ்டி நபரை சுட்டுபிடித்தது டில்லி போலீஸ்

குருகிராம்: பிரபலமான தீபக் நந்தல் என்ற தாதா கோஷ்டியை சேர்ந்த, அந்த கோஷ்டியின் துப்பாக்கி சுடும் நபரான நிலேஷ் என்பவரை கைது செய்தனர். பிரபல ஆடை வடிவமைப்பாளர் மயாங்க் சாவ்லாவின் நிறுவனத்தில் நுழைந்து, துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில், இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹரியானாவின் சோனிபட் நகரை சேர்ந்த இவரை, டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது துப்பாக்கியால் சுட்டு, போலீசார் பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து, ஆடை வடிவமைப்பாளரை மிரட்ட பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் அவர் பயணித்த இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

வீடு புகுந்து ரூ.40 லட்சம் கொள்ளை: தம்பதி கைது

புதுடில்லி: வீடு ஒன்றிலிருந்து, 40 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த கணவன் - மனைவி மற்றும் மைத்துனர் கைது செய்யப்பட்டனர்.

ஹரி ஓம் என்ற பண்டி, அவரின் மனைவி மோனிகா மற்றும் அந்த பெண்ணின் மருமகன் சன்னி லுத்ரா என்பவர்கள், வடக்கு டில்லியின் ரூப்நகர் போலீஸ் நிலைய எல்லையில், ராமவதார் அகர்வால், 67, என்ற வர்த்தகரின் வீட்டில் இருந்து, நேற்று முன்தினம், 11:30 மணிக்கு கொள்ளையடித்தனர்.

தகவல் கிடைத்த ரூப்நகர் போலீசார், பல தனிப்படைகள் அமைத்தும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தும், குற்றவாளிகளை தேடி வந்தனர்.

அதில், இந்த துணிகர கொள்ளையை நிகழ்த்தியது பிதாம்புரா பகுதியை சேர்ந்த கணவன் - மனைவி மற்றும் அந்த பெண்ணின் மைத்துனர் என்பதை அறிந்து, அவர்களை போலீசார், நேற்று காலை சுற்றி வளைத்தனர்.

அவர்களிடம் இருந்து, 39 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், மீதமுள்ள பணத்தை அவர்கள் மூவரும், பங்கிட்டுக் கொண்டதையும், 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் முதலீடு செய்திருப்பதையும் கூறினர். அவர்களை கைது செய்த போலீசார், மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர் .

ஹிந்து பெண்ணுடன் திருமணம் கோச்சிங் சென்டர் உரிமையாளர் கைது

குருகிராம்: ஹிந்து இளம்பெண்ணை கடத்தி சென்று, திருமணம் செய்த மாலிக் ஆசிப் முகமது என்ற கோச்சிங் சென்டர் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரிக்கின்றனர்.

டில்லி அருகே உள்ள குருகிராம் நகரில், மாலிக் ஆசிப் முகமது என்பவர், கோச்சிங் சென்டர் நடத்தி வந்தார். அவரது கல்வி நிறுவனத்தில், ஸ்பானிஷ் மொழி படிக்க, 26 வயது ஹிந்து மாணவி ஒருவர் வந்தார். அவரை அணுகிய மாலிக் ஆசிப் முகமது, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த பெண்ணை விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்று, மறைத்து வைத்தார்.

அந்த தகவல் அறிந்து, ஹிந்து அமைப்பினருடன் அங்கு சென்ற அந்த மாணவியின் பெற் றோரிடம், கோச்சிங் சென்டர் உரிமையாளரையே திருமணம் செய்து உள்ளதாக, அந்த பெண் கூறினார். அந்த பெண்ணிடம் அவளின் தாய் விசாரித்த போது, ஏற்கனவே இருவருக்கும் திருமணமாகி விட்டதும், அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் அவர் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

அதையடுத்து, போலீசில் அவர்கள் அளித்த தகவலின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

சிறுவன் கத்தியால் குத்தி கொலை கொன்ற மூன்று சிறார்கள் சிக்கினர்

புதுடில்லி: அவுட்டர் டில்லி மாவட்டத்தில், சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற மூன்று சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவுட்டர் டில்லியின் சுல்தான்புரி பகுதியில், முன் விரோதம் காரணமாக, சிறுவன் ஒருவனை மூன்று சிறார்கள் கத்தியால் குத்திக் கொன்றதாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வந்தது .

அதையடுத்து, அங்கு சென்ற போலீசார், அந்த சிறுவனின் உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அப்போது, சாதாரண மோதல் தொடர்பாக, மூன்று சிறார்களும் சேர்ந்து, கத்தியால் அந்த சிறுவனை குத்திக் கொன்றதை அறிந்தனர்.

அந்த சிறுவனும், அவரை கத்தியால் குத்திக் கொன்றவரும், ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் தான். இரு தரப்பினருக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலில், சிறுவனை கும்பலாக சேர்ந்து, கத்தியால் குத்திக் கொன்றது தெரிந்தது.

அதையடுத்து, அவர்கள் மூவரையும் கைது செய்துள்ள போலீசார், மேலும் விசாரிக்கின்றனர்.

*

'ஜட்ஜ்' என கூறி காரில் உலா வந்த இருவர் துப்பாக்கியுடன் கைது

புதுடில்லி:

ஜட்ஜ் என்ற சட்ட அதிகாரி என கூறி, போலீசாரை மிரட்டியவர் மற்றும் அவரின் கூட்டாளியிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ள போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

டில்லி அருகே உள்ள உத்தர பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சூர்யா அகர்வால், 31, மற்றும் நிகில் யாதவ், 21, இருவரும் சொகுசு வாகனம் ஒன்றில் பயணம் செய்தனர்.

அவர்களின் சொகுசு வாகனத்தில், நீதிபதி - உத்தர பிரதேசம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இருவரிடமும் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருந்தன. அதற்கான அனுமதி கடிதத்தை கேட்ட போது, உத்தர பிரதேச அரசு வழங்கியது என கூறி, அனுமதி கடிதத்தை கொடுத்தனர்.

அந்த கடிதத்தை ஆய்வு செய்த போது, அது போலி என்பது தெரிந்தது. அதையடுத்து, அவர்களிடம் விசாரித்த போது, வழக்கறிஞர்கள் என கூறினர். அதற்கான சான்றிதழை டில்லி போலீசார் கேட்ட போது, அதையும் அவர்களால் வழங்க முடியவில்லை.

இதையடுத்து, அவர்கள் இருவரையும், கைது செய்துள்ள போலீசார், அவர்கள் வந்த கார், வைத்திருந்த கைத்துப்பாக்கிகள், தோட்டாக்களையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us