முதியவரிடம் ரூ.15,000 பறிப்பு
பெங்களூரு உத்தரஹள்ளியை சேர்ந்தவர் ஆகாஷ், 74. ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் தனது காரில் பனசங்கரி நோக்கி சென்றார். அப்போது காரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், காரை நிறுத்தும்படி ஆகாஷிடம் கூறினார். ஆனால் அவர் வேகமாக ஓட்டினார். காரை, பைக்கால் மறித்த வாலிபர், விபத்தை ஏற்படுத்தியதாக கூறி, ஆகாஷிடம் தகராறு செய்து அவரை தாக்கினார். கத்தியை காட்டி மிரட்டி, கூகுள் பே மூலம் 15 ஆயிரம் பறித்துவிட்டு தப்பினார். பனசங்கரி போலீசார் விசாரிக்கின்றனர்.
தனியார் ஊழியர்களிடம் கொள்ளை
கேரளாவை சேர்ந்தவர்கள் சீஜி ஜமால், 25, எட்வின் பென்சன், 26. இவர்கள் இருவரும் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள, தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். பேகூரில் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பேகூரில் இருந்து, எலக்ட்ரானிக் சிட்டிக்கு பைக்கில் சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து இன்னொரு பைக்கில் இரண்டு பேர் வந்தனர். திடீரென பைக்கை வழிமறித்து சீஜி ஜமால், எட்வின் பென்சனை கரும்பால் தாக்கினார். பின்னர் அவர்கள் ஒரு பையில் வைத்திருந்த மடிக்கணினி, கீ போர்ட், மவுசை கொள்ளையடித்து விட்டு தப்பினர். தாக்குதலில் காயம் அடைந்த இருவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மாணவி துாக்கிட்டு தற்கொலை
தட்சிணகன்னடா புத்துார் கஜிமூலே கிராமத்தை சேர்ந்த தீக்ஷா, 16, முதலாம் ஆண்டு பி.யு.சி., படித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் தெரியவில்லை. காதல் விவகாரம் காரணமா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.
தவறி விழுந்த இளைஞர் பலி
பெங்களூரின், அன்னபூர்ணேஸ்வரி நகரில் வசித்தவர் அமித் சாங்க், 32. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை, நண்பர்களுடன் பார்ட்டி நடத்தினார். குடிபோதையில் கட்டடத்தின் மீதிருந்து கீழே விழுந்தார். இதில் காயமடைந்து உயிரிழந்தார்.
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை
மங்களூரு நகர வளர்ச்சி ஆணைய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில், 32 வயது பெண்ணொருவர் பணியாற்றுகிறார். இவருக்கு நகர வளர்ச்சி ஆணைய கமிஷனர் மன்சூர் அலி, பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து பெண் கொடுத்த புகாரின்படி, மன்சூர் அலி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விபத்தில் டிரைவர் பலி
பெங்களூரின் தின்னுார் பிரதான சாலையில் நேற்று அதிகாலை, வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை டிவைடரில் மோதியது. கார் ஓட்டுனர் ராஜு, 36, காயமடைந்து உயிரிழந்தார்.