வாலிபருக்கு 18 ஆண்டு சிறை
மங்களூரு தெரலகட்டேயைச் சேர்ந்தவர் சுஷாந்த் என்கிற ஷான், 31. நடன மைய பயிற்சியாளர். இங்கு பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணை, ஒருதலையாக காதலித்தார். காதலை வெளிப்படுத்தியபோது இளம்பெண் ஏற்கவில்லை. இதனால் கடந்த 2019ல் இளம்பெண்ணை கத்தியால் குத்தினார். இளம்பெண் உயிர் பிழைத்தார். சுஷாந்த் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ஜோதி நேற்று தீர்ப்பு கூறினார். சுஷாந்த்திற்கு 18 ஆண்டு சிறை தண்டனை, இரண்டு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மிரட்டி பணம் பறித்தவர் கைது
பெங்களூரு வடக்கு சைபர் கிரைம் போலீசார், தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில், சிலரை மிரட்டி பணம் பறித்ததாக, தாவணகெரேயைச் சேர்ந்த ஹரி, 27, என்பவரை கைது செய்தனர். சமூக வலைத்தளங்களில் இருந்து இளம்பெண்கள் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து, 'வாட்ஸாப்' முகப்பு படமாக ஹரி வைப்பார். இளம்பெண்கள் பேசுவது போல, சபல ஆண்களிடம் பேசுவார். பின்னர் நிர்வாண புகைப்படம் அனுப்ப கூறுவர். புகைப்படம் அனுப்பியவர்களை மிரட்டி, பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.