தம்பதியிடம் ரூ.6 கோடி மோசடி
பெங்களூரின், விஜயநகரில் கிரிஷ், மஞ்சுளா என்ற டாக்டர் தம்பதி மருத்துவனை நடத்துகின்றனர். 2022ல் இவர்களின் மருத்துவமனைக்கு காஸ்மெடிக் சர்ஜரிக்கு வந்த ஐஸ்வர்யா கவுடா இவர்களுக்கு நெருக்கமானார். தம்பதியிடம் பணம் இருப்பதை அறிந்த ஐஸ்வர்யா, சொகுசு கார்கள் வாங்கித் தருவதாக நம்பவைத்து, படிப்படியாக 6 கோடி ரூபாய் பெற்று, மோசடி செய்தார். பணத்தைத் திருப்பி கேட்டபோது, தன்னை பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் அளிப்பதாக, கிரிஷை மிரட்டினார். இதுகுறித்து தம்பதி புகார் அளித்ததால் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாணவி கடத்த முயற்சி
பெலகாவி, சிக்கோடியின், வித்யாநகர் லே அவுட்டில் வசிக்கும் 7 வயது மாணவி, இரண்டாம் வகுப்பு படிக்கிறார். நேற்று மதியம், பள்ளி அருகில் நின்றிருந்தபோது, மர்மநபர் ஒருவர் மாணவியின் வாயைப் பொத்தி, கடத்த முற்பட்டார். மாணவி, அந்த நபரின் கையை கடித்துவிட்டு, கூச்சலிட்டார். இதைக் கேட்டு அப்பகுதியினர் உதவிக்கு வந்ததால், அந்நபர் மாணவியை விட்டு விட்டு தப்பியோடினார்.
இளைஞர் தற்கொலை
தார்வாடின், சாதனகேரி லே அவுட்டில் வசித்த சேத்தன், 23, கால் பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். இதை கண்டித்த பெற்றோர், விளையாட்டை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தும்படி, அறிவுரை கூறினர். இதனால் மனம் வருந்திய சேத்தன், இரண்டு நாட்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தேடி வந்த நிலையில், கெலகேரி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது, நேற்று தெரிய வந்தது.
வீட்டின் கூரை இடிந்து முதியவர் பலி
பல்லாரி, சிரகுப்பாவின் தெக்கலகோட்டேவில், நேற்று அதிகாலை வீடொன்றின் கூரை இடிந்து விழுந்தது. இதில் பெல்லத சித்தப்பா, 60, என்பவர் உயிரிழந்தார். இவரது பேரபிள்ளைகள் கீர்த்தி, லட்சுமி, முத்துராஜ் ஆகிய மூவரும் காயமடைந்து, சிகிசை பெறுகின்றனர்.

