புகையிலை பொருட்கள் பறிமுதல்
கர்நாடகாவில் ஹுக்கா எனும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய, கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. இதையும் மீறி பெங்களூரு எச்.ஏ.எல்., கே.ஆர்.புரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட, ஹுக்கா பார்களில், ஹுக்கா விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 12.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஹுக்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொபைல் போன் பறிப்பில் 4 பேர் கைது
பெங்களூரு கே.ஆர்.புரம் போலீசார், தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில், இரவில் தனியாக நடந்து செல்பவர்களிடம் மொபைல் போன் பறித்த, நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 68 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டின் பேக்டரி, மாரத்தஹள்ளி, ஹெப்பால், சில்க் போர்டு, கே.ஆர்., புரத்தில் கைவரிசை காட்டியது தெரிந்தது.
பைக் மோதி வக்கீல் பலி
ஷிவமொகாவை சேர்ந்தவர் டிக்கப்பா, 57. வக்கீல். பெங்களூரு பசவனகுடியில் வசித்தார். நேற்று முன்தினம் இரவு டி.வி.ஜே., ரோட்டில் காரை நிறுத்திவிட்டு, சாலையை நடந்து கடக்க முயன்றார். அந்த வழியாக ஆதித்யா, 21, என்பவர் வேகமாக ஓட்டி வந்த பைக், டிக்கப்பா மீது மோதியது. படுகாயம் அடைந்த அவர் இறந்தார். ஆதித்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பசவனகுடி போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

