தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி
தாவணகெரே, ஹொன்னாளியின், துங்கபத்ரா லே அவுட்டில் வசித்தவர் அசாத் அகமது, 3. குழந்தை நேற்று காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது.
காம்பவுன்ட் இடிந்து தொழிலாளி பலி
விஜயபுரா, முத்தேபிஹாளின், ஜட்டகி கிராமத்தில் புதிதாக கட்டடம் கட்டப்படுகிறது. நேற்று மதியம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென காம்பவுன்ட் சுவர் இடிந்து விழுந்ததில், பசவலிங்கையா, 35, என்ற தொழிலாளி உயிரிழந்தார்.
மருமகனை துப்பாக்கியால் சுட்ட மாமனார்
பெலகாவி, ராய்பாகின், மொரபா கிராமத்தில் வசிக்கும் தனபால் ஆசங்கி, 54, இவரது மருமகன் சாந்திநாத், 32, ஆகிய இருவருக்கும் இடையே 30 சென்ட் நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நேற்று காலை இதே விஷயமாக, இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது தனபால் துப்பாக்கியால் சுட்டதில், குண்டு பாய்ந்து சாந்திநாத் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில், சிகிச்சை பெறுகிறார்.
வாகன தணிக்கையில்ரூ. 8 லட்சம் பறிமுதல்
துமகூரின், படவாடி சோதனைச்சாவடி அருகில், நேற்று மதியம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, 8 லட்சம் ரூபாய் இருந்தது. அதற்கு எந்த ஆவணங்கள் இல்லாததால், பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மளிகை கிடங்கில் தீ பயங்கர சேதம்
பெங்களூரின், கவி சித்தேஸ்வரா கோவில் அருகில், கிட்டங்கி உள்ளது. இதில் மளிகை பொருட்கள் உட்பட, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேகரித்து வைத்திருந்தனர். நேற்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் நாசமாகின. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.

