கிரைம் கார்னர்:ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கார் மர்ம நபர்களால் சேதம்
கிரைம் கார்னர்:ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கார் மர்ம நபர்களால் சேதம்
ADDED : மார் 25, 2026 02:09 AM
ரூ.85 லட்சம் வழிப்பறி வழக்கில் முக்கிய குற்றவாளி சுட்டு பிடிப்பு
புதுடில்லி: மத்திய டில்லி மாவட்டத்தில் உள்ள ஐ.பி., எஸ்டேட் என்ற இடத்தில், 85 லட்ச ரூபாய் வழிப்பறி தொடர்பாக தேடப்பட்டு வந்தவர், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, ஸ்கூட்டரில் வந்த அஜய் என்ற காலியா, 34, என்பவரை போலீசார், நிறுத்துமாறு சைகை காட்டினர். எனினும், அவர் தன் ஸ்கூட்டரை விட்டு, கீழே குதித்து, போலீசாரை நோக்கி, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுடத் துவங்கினார்.
பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில், காலில் காயமடைந்த அஜய், கீழே விழுந்ததும், அவரை சுற்றி வளைத்த போலீசார், போலீஸ் வாகனத்தில் ஏற்றி, சென்றனர்.
உஸ்மான்பூரை சேர்ந்த அவர் தலைமையிலான நான்கைந்து பேர் கொண்ட கும்பல், சமீபத்தில், 85 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்தது. அது முதல், அஜயை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அந்த வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கார் மர்ம நபர்களால் சேதம்
புதுடில்லி: கிழக்கு டில்லி மாவட்டத்தில் உள்ள மது விஹார் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவில், கோண்ட்லி சட்டசபை தொகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ., குல்தீப்குமார் என்ற மோனுவின் காரை, மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். சாலையோரம் உள்ள ஸ்வீட் ஸ்டாலில் நிறுத்தி சென்றிருந்த அவரின் காரின் இடது புற கண்ணாடியை வேண்டுமென்றே உடைத்து, சேதப்படுத்தியிருந்தனர்.
இதுகுறித்து, கிழக்கு டில்லியின் மது விஹார் பகுதி போலீசுக்கு, குல்தீப்குமார் புகார் அளித்தார். அதன்படி, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆசாத்பூர் மேம்பாலத்தில் கிடந்த மர்ம நபர் பலி
புதுடில்லி: டில்லியின் ஆசாத்பூர் மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நேற்று முன்தினம் மயங்கி கிடந்தார். அங்கிருந்தோரால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெறுவதற்கு முன், அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த நபர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
அந்த நபரின் காது, மூக்கு வழியே ரத்தம் வடிந்ததால், உடலின் உட்புறத்தில் ஏற்பட்ட காயத்தால், அந்த நபர் ரத்தம் வெளியேறியதால் இறந்திருக்க வேண்டும் என கருதினர்.
இறந்த அந்த நபரின் உடல், பாபு ஜகஜீவன்ராம் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் யார்; எதற்காக ஆசாத்பூர் மேம்பாலத்திற்கு அவர் வந்தார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
கத்தியால் குத்தப்பட்ட வாலிபர் மரணத்திற்கு பின் சிலர் கைது
புதுடில்லி: வட கிழக்கு டில்லி மாவட்டத்தில் உள்ள பஜன்புரா என்ற இடத்தில், 18 வயது வாலிபர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார். இந்த கொலை தொடர்பாக, சிலரை கைது செய்துள்ள போலீசார் விசாரிக்கின்றனர்.
வட கிழக்கு டில்லி மாவட்டத்தின் கிருஷ்ணா மந்திர் பகுதியில் வசித்த நபர், போஜன்புரா என்ற இடத்தில் நேற்று கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரு தேக் பகதுார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இறந்த அந்த நபர், முகமது ஆசிப் என்பதும், போஜன்புரா என்ற இடத்தில் உள்ள சுபாஷ் மொஹல்லா என்ற பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தது.
அவர் கொலை தொடர்பாக, போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
நகை வியாபாரி, மகனிடம் மர்ம கும்பல் வழிப்பறி
புதுடில்லி: டில்லியின் சீலாம்புர் பகுதியில், தங்க நகை வியாபாரி மற்றும் அவரின் தந்தையை, நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கி, வழிப்பறி செய்தது.
ஷாதாரா என்ற இடத்தை சேர்ந்த பிரதாம் பன்சால் என்பவர், தன் தந்தையுடன் ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். டில்லி சாந்தினி சவுக் பகுதியில் தங்க வியாபாரம் செய்து வந்த இருவரும், வீடு திரும்புவதை தொடர்ந்து கண்காணித்த நபர்கள் தான், இந்த துணிகர செயலில் இறங்கியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
அந்த கும்பலை தேடி வரும் போலீசார், சீலாம்பூர் வரை அந்த கும்பலை தேடி நேற்று சென்றனர். எனினும், அவர்கள் போலீஸ் பிடியில் சிக்காமல், தங்கள் இரு சக்கர வாகனத்தை விட்டு, தப்பினர்.
அந்த கும்பலிடம், சொகுசு கார் ஒன்று இருந்ததையும், அந்த கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
காரில் சென்றவர்கள் மீது டூ - வீலர் கும்பல் தாக்குதல்
பரீதாபாத்: தென் கிழக்கு டில்லியின் சங்கம் விஹார் பகுதியில் ராம்பால் என்பவர் தன் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கல்காஜி அருகே அந்த கார் சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சிலர், அந்த காரை தடுத்து நிறுத்தி, கண்மூடித்தனமாக தாக்கத் துவங்கினர்.
இதில், அந்த காரும், அதில் இருந்த ராம்பால் உள்ளிட்ட இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். எனினும், அந்த காரில் இருந்த பெண்களை அந்த கும்பல் ஒன்றும் செய்யவில்லை. இதனால், முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
