வாலிபர் மீது துப்பாக்கிச்சூடு
புதுடில்லி: வட கிழக்கு டில்லியின் காராவால் நகர் பகுதியில், 30 வயது நபரை, துப்பாக்கியால் சுட்ட நபரை பிடிக்க, போலீசார் தேடி வருகின்றனர் .
வட கிழக்கு டில்லியில் உள்ள காராவால் நகர் பகுதியில், ரத்த வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் கிடப்பதாக நேற்று முன்தினம் காலையில் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், ஸ்ரீகாந்த் என்ற நபர், துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்தனர்.
உடனடியாக அவரை, குரு டேக் பகதுார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த இடத்தை ஆய்வு செய்த தடய ஆய்வுத்துறையினர், சில ஆதாரங்களை அங்கிருந்து எடுத்து சென்றனர்.
ஜவுஹரி புர் என்ற பகுதியை சேர்ந்த, 30 வயதான ஸ்ரீகாந்த்திடம், அவரை துப்பாக்கியால் சுட்டது யார் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். அதுபோல, அவரை துப்பாக்கியால் சுட்டவர் குறித்து, கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.
கடையில் திருடிய 3 பெண்கள் கைது
குருகிராம்: குருகிராமில் உள்ள ரிலையன்ஸ் ஸ்டோரில் புகுந்து, பொருட்களை திருடிய, பீஹாரை சேர்ந்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
எம்.ஜி., ரோடு ரிலையன்ஸ் ரிடைல் ஸ்டோரில், பீஹாரை சேர்ந்த சோனி என்ற சாக்சி, சங்கீதா மற்றும் வசுந்தரா ஆகியோரை கைது செய்துள்ள, டி.எல்.எப்., பேஸ் 2 பகுதி போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்தனர்.
அந்த ஷோரூமின் மேலாளர், போலீசில் அளித்த புகார் படி, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 936 பொருட்கள் மர்ம கும்பலால் திருடப்பட்டுள்ளது என கூறப்பட்டது.
அதன் படி, விசாரணை மேற்கொண்ட போலீசார், பீஹாரை சேர்ந்த இந்த மூன்று பெண்களை கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி, பொருட்களை வாங்குவது போல, அந்த பிரமாண்ட கடைக்குள் புகுந்த இந்த மூன்று பேர் கும்பல், அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்களை கடந்த, ஆறு மாதங்களாக திருடி வந்தது, விசாரணையில் தெரிய வந்தது.
செக்யூரிட்டிகளிடம் விசாரணை
புதுடில்லி: தெற்காசிய பல்கலைக்கழகத்தில் படிக்கும், 18 வயது மாணவியை, நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், 70க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களை போலீசார் விசாரித்தனர்.
கடந்த 13ம் தேதி, தெற்காசிய பல்கலைக்கழகத்தில், பி.டெக்., முதலாம் ஆண்டு படிக்கும், 18 வயது மாணவியை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அன்றே, ஆடைகள் கிழிந்த நிலையில், அந்த மாணவி போலீசில் ஆஜராகி, தன்னை, நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக புகார் கூறினார்.
அவர் புகாரில் தெரிவித்த நான்கு பேரில் ஒருவர், அந்த பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றும் நபர்; இன்னொருவர் ஆர்யன் யாஷ் என்ற வாலிபர் என்பதை கண்டறிந்த போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர்.
அந்த கேமரா காட்சிகளின் படி, 70க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர்களில் பெரும்பாலானோர், அந்த வளாகத்தில் செக்யூரிட்டிகளாக பணியாற்றுபவர்கள் என்பதையும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு, ஆர்யன் யாஷ் என்ற வாலிபர், இ - மெயில் அனுப்பி, அதில், அந்த பெண்ணின் ஆபாச படங்களை பதிவேற்றி, அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவதாக கூறி, பல இடங் களுக்கும் அழைத்துச் சென்று, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு ஆதரவாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., சவுரவ் பரத்வாஜ் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு, புகாரை வாபஸ் வாங்குமாறு, பாதிக்கப்பட்ட அந்த பெண் வற்புறுத்தப் படுகிறார் என கூறினார்.
குற்ற செயல்கள் 20 சதவீதம் வீழ்ச்சி
புதுடில்லி: 'தென் கிழக்கு டில்லியில், போலீசார் மேற்கொண்ட பல நடவடிக்கைகளால், குற்ற நடவடிக்கைகள், 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன. குற்றச் செயல்களில் ஈடுபட்ட, 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என, போலீசார் கூறினர்.
'ஆப்பரேஷன் ஆகத் 2.0' என்ற பெயரில், தென் கிழக்கு டில்லி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். குறிப்பாக, இரவு நேரங்களில் அதிக போலீசார் ரோந்து சென்றனர். வாகன தணிக்கையில் தீவிரம் காட்டினர். தெளிவாக தெரியும் வகையில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளால், டில்லி நகரில் குற்ற நட வடிக்கைகள், முந்தைய ஆண்டை காட்டிலும், 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன.
இதுகுறித்து, போலீஸ் இணை கமிஷனர் சஞ்சய் ஜெயின் கூறியதாவது:
'ஆப்பரேஷன் ஆகத் - 2' என்ற பெயரில், போலீசார் மேற்கொண்ட ஒருங்கிணைந்த அணுகுமுறையால், இரவு நேர ரோந்து, வாகனங்கள் தணிக்கை மற்றும் கண் காணும் இடத்தில் போலீசார் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால், தெருக்களில் நடந்த குற்றங்கள் வெகுவாக குறைந்தன. 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் செயல்பட்ட பொருட்கள், ஆயுதங்கள், பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.