மொபைல் போனை திருடிய ஐந்து சிறார்கள் சிக்கினர்
புதுடில்லி:வடக்கு டில்லியில், வாலிபரை வழிமறித்து, மொபைல் போனை பறித்து சென்ற ஐந்து சிறார்களை போலீசார் கைது செய்தனர்.
வடக்கு டில்லியின் இந்தர்லோக் என்ற பகுதியில் சவுரவ் ஆலம், 23, என்பவர், கடந்த 19ம் தேதி இரவு, 10:00 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, 14 - 17 வயதுடைய ஐந்து சிறார்கள், திடீரென பாய்ந்து, ஆலமை தாக்கினர். அதில் அவர் நிலைகுலைந்த போது, அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்து தப்பினர்.
போலீசில் அவர் 19ம் தேதி இரவிலேயே புகார் கொடுத்தார். எனினும், நேற்று தான் குற்றவாளிகள் கைதாகினர். மொபைல் போனை வழிப்பறி செய்த ஐந்து சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கஞ்சா போதைக்கு அடிமையான இந்த சிறார்கள், இதுபோல அடிக்கடி அந்த பகுதியில் ரவுடித்தனம் செய்து வந்துள்ளனர். யாரும் புகார் கொடுக்காததால், போலீசில் பிடிபடவில்லை. அந்த கும்பலில் இருந்த இருவரை முதலில் பிடித்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், பிற மூன்று பேரை கைது செய்தனர்.
வாகன திருட்டு கும்பல் போலீசில் சிக்கியது
புதுடில்லி:கார், பைக் போன்ற வாகனங்களை திருடி விற்று வந்த மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, 15 வாகன திருட்டு வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.
மத்திய பிரதேசத்தின் இந்துார் பகுதியை சேர்ந்த ரன்வீர் சிங், 24, குர்தீப் சிங் மற்றும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கரன் சிங் ஆகியோரை, டில்லியின் பஹார்கஞ்ச் பகுதியில் போலீசார் பிடித்தனர்.
கைது செய்த அவர்களிடம் நடத்திய விசாரணையில், டில்லி மற்றும் புற நகர் பகுதிகளில் பைக் மற்றும் கார்களை திருடி, குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. போலீசில் அவர்கள் சிக்கியுள்ளதால், 15க்கும் மேற்பட்ட வாகன திருட்டு குற்றங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
அந்த கும்பலிடம் இருந்து நான்கு பைக்குகள், 41 கிராம் தங்கம், திருடப்பட்ட வாகனங்களில் இருந்து கழற்றி எடுத்த பொருட்கள் மற்றும் அவர்களின் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது, ம.பி.,யை சேர்ந்த ரன்வீர் சிங் என்பதும், அவர் டில்லியில் நடந்த திருட்டு வழக்கில், 2020ல் சிக்கியவர் என்பதும் தெரிய வந்தது.
ஜே.சி.பி., வாகனம் மோதி டூ - வீலரில் சென்றவர் பலி
புதுடில்லி:டில்லியில் சாலையில் சென்ற 22 வயது இளைஞர் ஓட்டி சென்ற டூ - வீலர் மீது ஜே.சி.பி., கனரக இயந்திரம் மோதியதில் அந்த வாலிபர் இறந்தார்.
ஷாதிபூர் மெட்ரோ ஸ்டேஷன் அருகே நடந்த இந்த விபத்தில் இறந்த வாலிபர் பெயர் பாபி, 22, என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஹரியானா மாநில போக்குவரத்து துறை பதிவெண் கொண்டிருந்த ஜே.சி.பி., இயந்திரம் மீது பாபி ஓட்டிய பைக் மோதியதில், அவர் பலியானார்.
திருப்பம் ஒன்றில் அவர் சென்ற போது, ஜே.சி.பி., இயந்திரம் திடீரென தவறான திசையில் திரும்பியதில், அந்த வாகனத்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பாபி இறந்தார். அவர் உடலை கைப்பற்றிய போலீசார், தலைமறைவான ஜே.சி.பி., ஓட்டுனரை தேடி வருகின்றனர்.