அமெரிக்காவில் தஞ்சமடையும் கிரிமினல்கள்: லோக்சபாவில் மத்திய அரசு தகவல்
அமெரிக்காவில் தஞ்சமடையும் கிரிமினல்கள்: லோக்சபாவில் மத்திய அரசு தகவல்
UPDATED : டிச 10, 2024 10:29 PM
ADDED : டிச 10, 2024 10:26 PM

புதுடில்லி: இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் மற்றும் கிரிமினல்களில் மூன்றில் ஒருவர், அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக அந்நாடு மாறி உள்ளது எனவும் லோக்சபாவில், மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையே குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பான ஒப்பந்தம் 1997ல் கையெழுத்து ஆனது.
இந்நிலையில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகள் தொடர்பான கேள்விக்கு லோக்சபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: இந்தியாவால் தேடப்படும் கிரிமினல்கள் மற்றும் பயங்கரவாதிகளில் 3ல் ஒருவர் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக அந்நாடு மாறி உள்ளது.
அவர்களை நாடு கடத்துவது தொடர்பாக இந்திய விசாரணை அமைப்புகள் அளித்துள்ள 178 விண்ணப்பங்களில் 65 இன்னும் அமெரிக்க அரசின் பரிசீலனையில் உள்ளன. இது வெளியுறவு அமைச்சகத்தின் ஆவணங்களில் உள்ளது. 2002 முதல் 2018ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 11 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டு உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 23 கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டன.
கிரிமினல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நபர்களை நாடு கடத்துவது தொடர்பாக மத்திய அரசு தூதரக ரீதியில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை நாடு கடத்துவது தொடர்பாக 48 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம செய்துள்ளது. 12 நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட உள்ளது. குற்றவாளிகள் நீதியில் இருந்து தப்பித்து விடாத வகையில், இன்னும் பல நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட உள்ளது.
அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பாலானோர் கொலை, ஆட்கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் மற்றும் நிதி மோசடி குற்றங்களில் ஈடுபட்டவர்களே அதிகம். இவ்வாறு நித்தியானந்த ராய் கூறினார்.
இந்தியா கோரிக்கை விடுத்தும், மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் பயங்கரவாதி டேவிட் ஹெட்லி இன்னும் நாடு கடத்தப்படவில்லை. மற்றொரு குற்றவாளி தவாஹிர் ராணாவை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
மேலும், இவர்களை தவிர்த்து பிரபல தாதாக்களான கோல் பிராரின் கூட்டாளியான சதிந்தர்ஜித் சிங் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் அன்மோல் ஆகியோர் அமெரிக்காவில் இருப்பவர்களில் முக்கியமான கிரிமினல்கள் ஆவார்கள்.