ADDED : நவ 10, 2024 09:20 AM

புதுடில்லி: '' அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தனியார் அமைப்பை சேர்ந்தவர்களும் நீதித்துறைக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: சில தனியார் அமைப்புகள் செய்தி மீடியா மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் நீதிபதிகளுக்கு நெருக்கடியை உணரும் சூழ்நிலையை உருவாக்குகின்றனர்.இன்றைய சுதந்திரமான காலகட்டத்தில் ஒருவர் விமர்சனத்திற்கு உள்ளாகிறார் அல்லது சமூக வலைதளங்களில் 'டுரோல் ' செய்யப்படுகிறார்.
அரசின் எண்ணத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்குவதை வைத்து மட்டும் நீதித்துறையின் சுதந்திரத்தை பார்க்கக்கூடாது.
நிர்வாக ரீதியில் சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை பிரச்னைக்கு தீர்வு காண அரசுடன் ஆலோசனை நடத்துவது முக்கியம். நீதிபதிகளை தேர்வு செய்வதில் சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் - மத்திய அரசுக்கு இடையிலான மோதலில் எனது கழுத்து பல முறை தலைப்பு செய்தியாக மாறியது. இதில் நேர்மையுடனேயே செயல்பட்டு உள்ளேன். அனைத்து பிரச்னைகளும் பேசி தீர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
10 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு
சந்திரசூட் மேலும் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் வழக்குகளில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது நீதிமன்றங்களுக்கு சவால் ஆனதாகவே இருந்து வருகிறது. 2020 ஜன.,1 அன்றைய நிலவரப்படி 79,528 வழக்குகள் நிலுவையில் இருந்தது. 2022 ஜன.,1ல் 93,011 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2024நவ.,1 நிலவரப்படி 82,885 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 10 ஆயிரம் வழக்குகள் குறைந்துள்ளன. இவ்வாறு சந்திரசூட் கூறினார்.