பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பதா? தலைமை தேர்தல் கமிஷனர் கோபம்
பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பதா? தலைமை தேர்தல் கமிஷனர் கோபம்
ADDED : நவ 08, 2024 10:18 PM

மும்பை: தேர்தல் பிரசாரத்தின் போது பெண்களை, வேட்பாளர்கள் கண்ணியக்குறைவாக விமர்சிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது: மாவட்ட தேர்தல் அலுவலர்கள், போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள், மாநகராட்சி கமிஷனர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ராஜிவ் குமார் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பெண்களின் கவுரவம் மற்றும் கண்ணியத்தை குலைக்கும் வகையில் சிலர் பேசுவதற்கு கவலை தெரிவித்தார்.
மேலும் அவர், அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பெண்களின் கண்ணியத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். பிற கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தக்கூடாது, எதிர்தரப்பினரை ஏளனம் செய்யும் வகையில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யக்கூடாது.
பெண்களுக்கு எதிராக கண்ணியக்குறைவாக பேசும் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராஜிவ் குமார் பேசியதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.