ADDED : டிச 31, 2024 05:40 AM

ஆனேக்கல்: 'ஜிகனி ஏரியில் முதலை தென்படுகிறது. ஏரி அருகில் செல்ல வேண்டாம்' என, அப்பகுதி மக்களை வனத்துறை எச்சரித்துள்ளது.
பெங்களூரு ரூரல், ஆனேக்கல்லின் ஜிகனி ஏரியில் ஒரு வாரமாக முதலை காணப்படுகிறது. இதை பார்த்த சிலர், மொபைல் போனில் பதிவு செய்து, வீடியோ வெளியிட்டுள்ளனர்.
ஏரி நீரின் மரத்துண்டு மீது முதலை படுத்திருப்பது, நீருக்குள் மூழ்கி இருக்கும் காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
உடனடியாக எச்சரிக்கை அடைந்த, ஜிகனி உள்ளாட்சி அதிகாரிகள், முதலையின் படத்துடன் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து, அதை பிடித்து வனப்பகுதிக்குள் விடும்படி கோரியுள்ளார்.
வனத்துறையினரும் முதலையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். ஏரி நீரில் செடி, கொடிகள் நிரம்பியுள்ளதால் முதலை தென்படுவது இல்லை. உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே தென்படுகிறது.
எனவே வனத்துறையினர் முதலையை பிடிக்கும் வரை, எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
'கால்நடைகளை ஏரிக்கரையில் மேய விட வேண்டாம். சிறுவர்கள் நீச்சலடிக்க செல்ல வேண்டாம்' என, ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கின்றனர்.