ADDED : பிப் 16, 2024 07:25 AM

பெங்களூரு: ''ராய்ச்சூர் மாவட்டத்தில், கிருஷ்ணா ஆற்றுப்பகுதியில், முதலை பூங்கா அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்,
சட்டசபை கேள்வி நேரத்தில், காங்., உறுப்பினர் பசவனகவுடா தத்தல் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது:
கிருஷ்ணா ஆற்றில் முதலை தொந்தரவால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கும் நோக்கில், 'முதலை உள்ளது எச்சரிக்கை' என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணா ஆற்றங்கரைப் பகுதியில், முதலைகள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இங்கு தீர்த்த தலங்களில் இருப்பதை போன்று, இரும்பு சங்கிலி வேலி பொருத்துவது உட்பட, பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. முதலை பூங்கா அமைப்பது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.