இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்; அமெரிக்க நிறுவனங்கள் வழங்கியது அம்பலம்
இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்; அமெரிக்க நிறுவனங்கள் வழங்கியது அம்பலம்
ADDED : டிச 17, 2024 02:38 AM

புதுடில்லி : இந்தியாவில் ஒப்பந்தங்கள் பெறுவதற்கு, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் சிக்கியுள்ளன. இந்த வழக்குகளில் தண்டனையில் இருந்து தப்பிக்க, இந்த நிறுவனங்கள், 1,700 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள சட்டங்களின்படி, அங்குள்ள நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பது பெரிய குற்றமாகும்.
இவ்வாறு லஞ்சம் கொடுத்ததை மறைப்பது, அந்த நாட்டின் பங்குச் சந்தை சட்டத்தின்படி குற்றம். இதற்காக அந்த நாட்டின் நீதித்துறையும், பங்குச் சந்தை கமிஷனும் வழக்குகள் தொடர முடியும்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த, 'த டெய்லி பயனிர்' என்ற பத்திரிகையில், ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவைச் சேர்ந்த, 'மூக் இன்கார்ப்பரேஷன், ஆரக்கிள், அல்பமார்லே கார்ப்பரேஷன்' ஆகிய மூன்று நிறுவனங்கள், இந்தியாவில் பல ஒப்பந்தங்களை பெற்றுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் பெறுவதற்காக, இந்தியன் ரயில்வே, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கு இந்த நிறுவனங்கள், பல கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுத்துள்ளன.
இது தொடர்பாக, அமெரிக்க பங்குச் சந்தை கமிஷன் வழக்குகள் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில் தண்டனை பெறுவதில் இருந்து தப்பிக்க, இந்த மூன்று நிறுவனங்களும், 1,700 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தியுள்ளன.
தாங்கள் அளித்த லஞ்சத்தைவிட, மூன்று மடங்கு அளவுக்கு அபராதமாக இந்த நிறுவனங்கள் செலுத்தியுள்ளன.
மூன்றில் இரண்டு வழக்குகளில், ரயில்வே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள், அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டது.
இந்தியாவைத் தவிர, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, இந்தோனேஷியா, வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இந்த நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தது தொடர்பாகவும் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.