சபரிமலையில் மீண்டும் கூட்டம்; ஏழு மணி நேரம் காத்திருப்பு
சபரிமலையில் மீண்டும் கூட்டம்; ஏழு மணி நேரம் காத்திருப்பு
ADDED : நவ 26, 2025 01:16 AM

சபரிமலை: சபரிமலையில் நேற்று மீண்டும் பக்தர் கூட்டம் அதிகரித்தது. இதனால் நேற்று 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் வழங்கப்பட்டது.
சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல கால நடை திறந்த முதல் மூன்று நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 8 மணி நேரம் வரை பக்தர்கள் குடிநீரும் உணவும் கிடைக்காமல் வரிசையில் நின்று சிரமப்பட்டனர். பம்பையில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததால் ஏராளமான பக்தர்கள் திரும்பி சென்ற நிலையும் ஏற்பட்டது.
இதனால் கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப் பட்டது. எனினும் சபரிமலையில் இருக்கும் நிலைமைக்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
நிலைமை ஓரளவு சீராகி வந்த நிலையில் நேற்று முன்தினம் மதியத்திற்கு பின்னர் மீண்டும் கூட்டம் அதிகரித்தது. சன்னிதானம் நடை பந்தலில் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் கூப்பன்கள் வழங்கப்பட்டன.
நேற்று பம்பையில் இருந்து மலை ஏறிய பக்தர்கள் 7 மணி நேரம் வரை காத்திருந்தே 18 படிகளில் ஏற முடிந்தது. 18 படிகளில் பக்தர்களை ஏற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் 18 படிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ள போலீசாரை வரவழைக்க முடிவு செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை. நேற்று மாலை வரை சபரிமலையில் மழை பெய்யவில்லை.

